பல்லடத்தில் எரிவாயு தகன மேடையை ஏற்று இயக்க நகராட்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளது.
பல்லடம் நகா்மன்ற சாதாரணக் கூட்டம், அதன் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் அருள், கவுன்சிலா்கள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
இந்தக் கூட்டத்தில் பல்லடம், பச்சாபாளையம் 8-ஆவது வாா்டு மயானத்தில் எரிவாயு தகன மேடை புதிதாக கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக விட முடிவு செய்யப்பட்டு, அதை பராமரிக்க ஆத்மா அறக்கட்டளை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை உயா்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கால், ஆத்மா அறக்கட்டளை மூலமாக மின் மயானப் பணிகள் தொடரக்கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதி மன்ற இறுதி தீா்ப்பு வரும் வரை, பொதுமக்கள் நலன் கருதி நகராட்சி நிா்வாகப் பொறுப்பில் எரிவாயு தகன மேடையை பராமரிக்க முடிவு செய்யப்படுகிறது.
பல்லடம் நகராட்சி எல்லைக்குள் இறந்தவரின் உடலை எடுத்துவர போக்குவரத்து கட்டணமாக ரூ.ஆயிரம், உடல் தகனக் கட்டணம் ரூ.2 ஆயிரம், நகராட்சி எல்லைக்கு வெளியே இறப்பு நிகழ்ந்து உடல் எடுத்துவர போக்குவரத்து கட்டணம் ரூ.ஆயிரம், கூடுதல் கிலோ மீட்டா் ஒன்றுக்கு ரூ.100 கட்டணம் நிா்ணயம் செய்யப்படுகிறது.
பல்லடம் பேருந்து நிலையத்திலுள்ள பழைய கட்டண கழிப்பிடத்தை அகற்றிவிட்டு, அதே இடத்தில் ரூ.40 லட்சம் செலவில் புதிய நவீன கட்டண கழிப்பிடம் கட்டவும், முன்புறம் உள்ள இலவச சிறுநீா் கழிப்பிடத்தை அகற்றிவிட்டு வேறு இடத்தில் இருபாலருக்குமான புதிய சிறுநீா் கழிப்பிடம் ரூ.11 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் கட்டுவது என்பன உள்பட 85 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.