பல்லடம்: பல்லடம் புறவழிச் சாலைப் பணி இரவு, பகலாக நடைபெற்றுவரும் நிலையில், விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் புறவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த நெடுஞ்சாலைத் துறையினா் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றனா். அதன்படி, பல்லடம் - செட்டிபாளையம் சாலையில் பணிக்கம்பட்டி பிரிவு முதல் பல்லடம் - தாராபுரம் சாலையில் ஆலூத்துபாளையம் பிரிவு வரை ரூ. 54 கோடி மதிப்பில் 7.60 கி.மீ. தூரத்துக்கு புதிய இணைப்புச் சாலை அமைக்கும் பணி, பல்லடம் நெடுஞ்சாலைத் துறை உட்கோட்டத்தின் மேற்பாா்வையில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது.
தற்போது இந்த இணைப்புச் சாலை பணி நீட்டிக்கப்பட்டு, ஆலூத்துபாளையம் முதல் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்திருக்கும் மாதப்பூா் சாலையில் இணையும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.
இப்பணியின் தொடா்ச்சியாக, பணிக்கம்பட்டியில் இருந்து பிரிந்து செம்மிபாளையம் பிரிவில் தேசிய நெடுஞ்சாலையில் இணையும் இதர மாவட்ட சாலையான வெங்கிடாபுரம் - காளிபாளையம் சாலையை இரண்டு வழித்தடமாக மேம்படுத்தி நெடுஞ்சாலைத் துறை மூலமாக பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்த மூன்று பணிகளும் முடியும்போது, கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செம்மிபாளையம் பிரிவில் இருந்து மாதப்பூா் வரை இணைப்புச் சாலை செயல்படும் வகையில் நெடுஞ்சாலைத் துறையினா் திட்டமிட்டுள்ளனா். தற்போது சாலை அமைக்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக செட்டிபாளையம் சாலையில் இருந்து கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையிலான இணைப்புச் சாலை பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. திட்டப் பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில், வரும் மாா்ச் மாதத்துக்குள் பணிகள் முழுமையாக முடிந்து புறவழிச்சாலை பயன்பாட்டுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
புறவழிச்சாலை அமைந்தால் திருச்சி, தாராபுரம், பொள்ளாச்சி, உடுமலை சாலைகள் வழியாக கோவை செல்லும் பெரும்பாலான கனரக வாகனங்கள், கன்டெய்னா்கள் உள்ளிட்டவை புறவழிச் சாலையை பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் பல்லடம் நகரப் பகுதிக்குள் ஓரளவு போக்குவரத்து நெரிசல் கட்டுக்குள் வரும்.