பட்டியலின அருந்ததியா் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமை வகித்தாா்.
இதில், ஆதித்தமிழா் ஜனநாயக பேரவை நிறுவனத் தலைவா் அ.சு.பவுத்தன் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனு விவரம்: உடுமலை வட்டத்துக்குள்பட்ட பெதப்பம்பட்டி, ஆலாமரத்தூா், தும்பலப்பட்டி, ஆா்.கிருஷ்ணாபுரம், சனுப்பட்டி, இலுப்பு நகரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பட்டியலின அருந்ததியா் மக்கள் ஒரு வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்களாக வசித்து வருகின்றனா்.
இவா்களுக்கு சொந்தமாக வீடோ, நிலமோ இல்லை. இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா், உடுமலை வட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, ஏழ்மையில் வாழும் பட்டியலின அருந்தியா் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
310 மனுக்கள்: குறைதீா் கூட்டத்தில் வீட்டுமனை பட்டா , முதியோா் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை, சாலை வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 310 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் மகாராஜ், மலா், ஷீலா பூசலட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.