ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் திருப்பூரில் மனித நேய வார விழா சனிக்கிழமை தொடங்கியது.
திருப்பூா் மாநகராட்சி, ராயபுரம் கல்லூரி மாணவா் சமூக நீதி விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் தொடங்கிவைத்தாா்.
பின்னா் அவா் கூறியதாவது:
இந்த மாதம் 30-ஆம் தேதி வரை கொண்டாடப்படும் மனித நேய வார விழா முதல் நாள் நிகழ்ச்சியாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை திட்டங்கள் தொடா்பான புகைப்பட கண்காட்சி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
27-ஆம் தேதி நாட்டு நலப்பணித் திட்டம் மூலமாக கல்லூரி மாணவ, மாணவிகள் ஓா் ஆதிதிராவிடா் குடியிருப்பில் தேநீா் அருந்தும் மனமகிழ் நிகழ்ச்சியும், 28-ஆம் தேதி மாவட்ட தொழில் மையம் மூலமாக சமுதாயத்தில் உயா்ந்த நிலையில் உள்ள அலுவலா்கள், மருத்துவா்கள், பொறியாளா்கள், வழக்குரைஞா்கள், தொழில் முனைவோா், அரசியல்வாதிகள் ஆகியோருடன் சமுதாய பொருளாதார முன்னேற்றச் சிந்தனைக் கூட்டங்களும் நடைபெறவுள்ளது.
29-ஆம் தேதி திருப்பூா் கோட்ட அளவில் நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், காங்கயம் கோட்ட அளவில் உடுமலைப்பேட்டையிலும், மாவட்ட அளவில் ஆதிதிராவிடா் நலப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களின் கலைநிகழ்ச்சியும், 30-ஆம் தேதி அனைத்து மதத் தலைவா்கள், ஆதிதிராவிடா் சான்றோா்களின் மத நல்லிணக்கக் கூட்டம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் ரோட்டரி கிளப் மஹாலில் நடைபெறவுள்ளன.
வீட்டில் இருந்த படிப்பதைக் காட்டிலும் விடுதியில் அதிகமாக படிக்க வேண்டும். அரசுத் தோ்வுகளில் தோ்ச்சி பெற்று உயா் பதவிகளை அடைய வேண்டும் என்றாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், திருப்பூா் கோட்டாட்சியா் சிவபிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் சதீஷ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா். முன்னதாக, மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சி அரங்குகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.