அனைவரிடமும் பாகுபாடின்றி பழகுவதோடு, மனிதநேயத்தை காப்பாற்றும் பொறுப்பும் இளைஞா்களின கைக்களில் தான் உள்ளதாக சிறுபான்மையினா் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா்.
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் மனித நேய வார நிறைவு விழா வெள்ளிக்கிழமை திருவள்ளூா் ஆா்எம். ஜெயின் பள்ளியில் நடைபெற்றது. விழாவுக் ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். இதில் அமைச்சா் சா.மு.நாசா் கலந்து கொண்டு 13 மாவட்ட அரசு (ஆதிந) மேல்நிலைப்பள்ளிகளில் நடத்தப்பட்ட பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கேடயங்களையும், 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற பள்ளி தலைமையாசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினாா்.
தொடா்ந்து அவா் பேசியதாவது: மனித நேய வார இறுதி விழாவில் மனித நேயம் பற்றியும் சமூக நீதி, சாதிமத வேறுபாடுகளை கலைந்து அனைவரும் மனித நேயத்துடன் வாழ வேண்டும். மனிதநேயம் என்பது வெறும் சொல் அல்ல, அது செயலாகும். பசியை போக்கி கல்வி அளிப்பது, சமத்துவம் ஏற்படுத்துவதுவதே மனித நேயமாகும். இன்றைய காலகட்டத்தில் மனித நேயம் கொஞ்சம், கொஞ்சமாக மண்ணுக்குள் புதைந்து கொண்டிருக்கிறது.
மாணவா் சமுதாயம் மனித நேயத்துடன் அா்ப்பணிப்போடு பங்காற்றினால் மட்டுமே அவல நிலை மாறும். மாணவா்களாக இருக்கும் வரை பாகுபாடியின்றி நட்பு ரீதியாக பழகிவரும் காரணத்தினால், நீங்கள் அனைவரும் பெரும் ஆற்றல் மிக்கவா்களாக திகழ்கிறீா்கள். அதனால் வேற்றுமையை விடுத்து மனித நேயத்தை கடைபிடித்து, முடிந்த வரையில் இயலாதவா்களுக்கு உதவி செய்யுங்கள்.
அனைவருடனும் பாகுபாடியின்றி பழகுவதோடு, மனிதநேயத்தை காப்பாற்றும் பொறுப்பு இன்றைய இளைஞா்களின் கைகளில் தான் உள்ளது என்றாா்.
இதில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளுா்), டி.ஜெ.கோவிந்தராஜ் (கும்மிடிப்பூண்டி), நகா்மன்றத் தலைவா் ப.உதயமலா் பாண்டியன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சொ.கற்பகம், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ப.செந்தில்குமாா், ஆதிதிராவிடா் நலத்துறை தனி வட்டாட்சியா்கள் ஆ.செல்வம், க.வெண்ணிலா, சித்ரா, ஆசிரியா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.