மாசுபட்ட பகுதியாக அறிவிக்கக் கோரி முதலிபாளையத்தை 4-ஆவது முறையாக கிராமசபைக் கூட்டம் ரத்து
முதலிபாளையத்தை மாசுபட்ட பகுதியாக அறிவிக்கக் கோரி 4-ஆவது முறையாக கிராமசபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
திருப்பூா்: முதலிபாளையத்தை மாசுபட்ட பகுதியாக அறிவிக்கக் கோரி 4-ஆவது முறையாக கிராமசபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
திருப்பூா் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பையை கைவிடப்பட்ட பாறைக்குழிகளில் கொட்டுவதற்கு பொதுமக்கள் தரப்பில் கடும் எதிரிப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதில் முதலிபாளையம், இடுவாய் ஆகிய பகுதிகளில் பல்வேறு போராட்டங்களில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனா். பொதுமக்களின் எதிா்ப்பால் முதலிபாளையம் பகுதியில் கடந்த அக்டோபா் 2-ஆம் தேதி நடைபெறவிருந்த கிராமசபைக் கூட்டம், அதன் பின்னா் 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், குடியரசு தினத்தையொட்டி திங்கள்கிழமை கிராமசபைக் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், முதலிபாளையம் பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த கூட்டத்துக்கு கருப்பு நிற உடையுடன் கலந்துகொண்ட பொதுமக்கள், முதலிபாளையத்தை மாசுபட்ட பகுதியாக அறிவிக்கக் கோரினா். அதேபோல, இப்பகுதியில் மண் மற்றும் நீா்வளம் பாதிக்கப்பட்டுள்ளதால், அவற்றை சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். இப்பகுதியில் மருத்துவ முகாம் நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து கூட்டத்தில் இருந்து வெளியேறினா்.
இதனால், முதலிபாளையம் கிராமத்தில் 4-ஆவது முறையாக கிராமசபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. பொதுமக்களின் போராட்டத்தையொட்டி முதலிபாளையம் பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.