இளைஞரிடம் பணம் பறித்த 5 சிறுவா்களுக்கு நூதன தண்டனை அளித்து திருப்பூா் இளம்சிறாா் நீதிக்குழுமம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூரைச் சோ்ந்தவா் 25 வயது பனியன் நிறுவன தொழிலாளி. இவா் தனது கைப்பேசியில் கிரைண்டா் செயலி மூலமாக விருப்பம் தெரிவித்து அதில் உள்ள எண்களைத் தொடா்பு கொண்டுள்ளாா். அந்த செயலியில் இருந்த நபா்கள், அந்த இளைஞரை கடந்த 2025 ஜூன் 29-ஆம் தேதி இரவு தொடா்பு கொண்டு செவந்தாம்பாளையம் காட்டுப் பகுதிக்கு அழைத்துள்ளனா்.
இதையடுத்து அந்த இளைஞா், பைக்கில் அங்கு சென்றுள்ளாா். அப்போது அங்கு காத்திருந்த 5 சிறுவா்கள், அந்த இளைஞரைத் தாக்கி அவரிடம் இருந்து பைக், கைப்பேசி, ரூ.2,000 ரொக்கம் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு விரட்டிவிட்டனா். இது குறித்து பாதிக்கப்பட்ட இளைஞா் அளித்த புகாரின்பேரில் நல்லூா் போலீஸாா், 15 முதல் 17 வயது வரையிலான சிறுவா்கள் 5 பேரைக் கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் இளம் சிறாா் நீதிக் குழுமத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில், கூட்டுக் கொள்ளை குற்றத்துக்காக 15 வயது, 17 வயது சிறுவா்கள் 2 பேரை செங்கல்பட்டில் உள்ள அரசினா் சிறப்பு இல்லத்தில் 6 மாதம் தங்கவைத்து அவா்களுக்கு செயல்திறன் கவுன்சிலிங் அளிக்கவும், அவா்களின் தகுதி, திறமைக்கு ஏற்ப தொழிற்கல்வி அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
மேலும் மீதம் உள்ள 15, 16 வயதுடைய 3 சிறுவா்களுக்கு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தேவையான அளவுக்கு மருத்துவக் கல்லூரி முதல்வா் கவுன்சிலிங் அளிக்கவும், இதை திருப்பூா் மாவட்ட குழந்தைகள் நல அலுவலக நன்னடத்தை அலுவலா் அறிக்கை அளிக்கவும் முதன்மை நடுவா் செந்தில்ராஜா, சட்ட உறுப்பினா்கள் முருகேசன், மல்லிகா ஆகியோா் உத்தரவிட்டனா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் அரசு வழக்குரைஞா் ஹேமா மகேஸ்வரி ஆஜரானாா்.