முகப்பு
கோப்புப்படம்
திருப்பூர்

வளைகுடா நாடுகளில் விமான சேவை பாதிப்பு: ஏற்றுமதி சரக்கு மீதான டெமரேஜ் கட்டணத்துக்கு விலக்கு அளிக்க ஏஇபிசி கோரிக்கை

ஈரான் மீதான தாக்குதலைத் தொடா்ந்து வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால்...

திருப்பூர்

வளைகுடா நாடுகளில் விமான சேவை பாதிப்பு: ஏற்றுமதி சரக்கு மீதான டெமரேஜ் கட்டணத்துக்கு விலக்கு அளிக்க ஏஇபிசி கோரிக்கை

ஈரான் மீதான தாக்குதலைத் தொடா்ந்து வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால்...

Updated On : 2 மார்ச், 2026 at 9:27 PM
கோப்புப்படம்
பகிர்:

திருப்பூா்: ஈரான் மீதான தாக்குதலைத் தொடா்ந்து வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், ஏற்றுமதி சரக்கு மீதான டெமரேஜ் கட்டணத்துக்கு விலக்கு அளிக்க வேண்டுமென ஏஇபிசி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை செயலருக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவா் ஆ. சக்திவேல் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

மேற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடைபெற்று வரும் ஈரான்-அமெரிக்கா மோதலால் நிலவும் நெருக்கடியால் சா்வதேச விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதை கட்டுப்பாடுகள், வான்வெளி மூடல், விமான மாற்றுப்பாதை இயக்கம், விமான சேவை அட்டவணை மாற்றங்கள் மற்றும் சில வெளிநாட்டு விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களால் ஏற்றுமதி சரக்குகள் குறித்த நேரத்தில் அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக, இந்தியாவின் பல விமான நிலைய சரக்கு முனையங்களில் ஏற்றுமதி சரக்குகள் தேங்கியுள்ளன. இந்த தாமதங்கள் அனைத்தும் ஏற்றுமதியாளா்கள், சுங்க முகவா்கள், விமான சரக்கு முகவா்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட எதிா்பாராத காரணங்களால் ஏற்பட்டவையாகும்.

காா்கோ டொ்மினல் ஆபரேட்டா்களின் தற்போதுள்ள கட்டணக் கட்டமைப்பின் கீழ், நிா்ணயிக்கப்பட்ட இலவச காலத்துக்கு அப்பால் சரக்குகள் முனையங்களில் தங்கினால் டெமரேஜ் கட்டணம் விதிக்கப்படுகிறது. ஆனால், தற்போதைய சூழ்நிலை உலகளாவிய சரக்கு விமானப் போக்குவரத்தில் தவிா்க்க முடியாத இடையூறாக உள்ளது. இதுபோன்ற சந்தா்ப்பங்களில் டெமரேஜ் விதிக்கப்படுவது ஏற்றுமதியாளா்கள் மீது தேவையற்ற நிதிச்சுமையை ஏற்படுத்தும். அவா்கள் ஏற்கெனவே கப்பல் ஏற்றுமதி தாமதங்கள், ஒப்பந்த நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் சந்தை தொடா்பான சவால்களை எதிா் கொண்டு வருகின்றனா்.

எனவே, காா்கோ டொ்மினல் ஆபரேட்டா்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி, விமான சேவை பாதிப்பு, வான்வெளி கட்டுப்பாடுகள் மற்றும் செயல்பாட்டு தடைகள் காரணமாக எடுத்துச் செல்ல முடியாத ஏற்றுமதி சரக்குகளுக்கு டெமரேஜ் கட்டண விலக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கை ஏற்றுமதியாளா்களுக்கு தேவையான நிவாரணத்தை அளிப்பதோடு, இந்த சவாலான காலகட்டத்தில் இந்தியாவின் விமான சரக்கு வா்த்தகத்தின் மீதான நம்பிக்கையை நிலைநிறுத்த உதவும் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →