முகப்பு
தற்போதைய செய்திகள்

அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!

அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் இடையே போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் வாழ் உள்ள தமிழர்களுக்கான உதவி எண்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது தொடர்பாக...

Updated On : 1 மார்ச், 2026 at 8:14 PM
இஸ்ரேல் - ஈரான் போர்
பகிர்:

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளின் போா்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், வளைகுடா நாடுகளில் வசித்து வரும் தமிழர்களுக்கான உதவி எண்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி சனிக்கிழமை ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் அதிரடித் தாக்குதலை தொடங்கின. அண்டை நாடுகளான ஈராக், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை தங்களின் விமானப் போக்குவரத்துக்கான வான்வெளி மூடப்பட்டுள்ளது. ஜோா்டானிலும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அபாய ஒலி ஒலிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மத்திய கிழக்கு நாடுகளில் வசித்து வரும் இந்திய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசை அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில், அந்த நாடுகளில் வாழும் தமிழர்களை காப்பாற்றும் முனைப்பில் தமிழ்நாடு அரசு உதவி எண்ணை அறிவித்துள்ளது.

இதுகுறித்து முதல்வர் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தற்போது ஏற்பட்டுள்ள போர் காரணமாக ஈரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், ஓமன், சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதன் காரணமாக அங்கு உள்ள இந்தியர்களின் பாதுகாப்பைக் கருதி, பயணங்களைத் தவிர்க்கவும், முடிந்தவரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும், இந்தியத் தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தலின்படி செயல்படவும் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு முதல்வராக, வளைகுடா நாடுகளில் வசித்து வரும் நம் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். அங்குள்ள தமிழர்களின் நிலைமையை உடனுக்குடன் அறிந்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்காக, தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறைக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, நிலைமை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு, அங்குள்ள தமிழர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, நிலைமையைக் கண்காணித்து வருகிறது. மேலும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும் தயார் நிலையில் உள்ளது.

போர்ப் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், அவர்கள் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் 24 மணி நேர கட்டணமில்லா உதவி எண்களையோ அல்லது புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தின் கட்டுப்பாட்டு அறையினையோ தொடர்புகொள்ளலாம்.

மேலும், தங்கள் பகுதிகளில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

புது தில்லி கட்டுப்பாட்டு அறையின் உதவி எண்கள்:

இந்தியாவுக்குள் இருப்பவா்கள் 1800 309 3793 என்ற எண்ணையும், வெளிநாடுகளில் இருப்பவா்கள் +91 80 6900 9900 மற்றும் +91 80 6900 9901 ஆகிய எண்களையும் தொடா்பு கொள்ளலாம். மேலும், தில்லி கட்டுப்பாட்டு அறையை 011-24193300 மற்றும் 92895 16712 (செல்போன் எண் மற்றும் வாட்ஸ்ஆப்) ஆகிய எண்கள் மூலம் தொடா்பு கொள்ளலாம் என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

US-Israel, Iran War: Helpline numbers announced for Tamils ​​living in the Gulf

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.