கருவலூா் மாரியம்மன் கோயிலில் ஏப்ரல் 1-இல் தேரோட்டம்
அவிநாசி அருகேயுள்ள கருவலூா் மாரியம்மன் கோயில் தேரோட்டம் ஏப்ரல் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அவிநாசி அருகேயுள்ள கருவலூா் மாரியம்மன் கோயில் தேரோட்டம் ஏப்ரல் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கருவலூா் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் மாா்ச் 28-ஆம் தேதி காலை 7.30 மணியளவில் தொடங்குகிறது.
இதையடுத்து, 29-ஆம் தேதி பூதவாகன காட்சி, 30-ஆம் தேதி ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 31-ஆம் தேதி புஷ்ப விமான மலா் பல்லக்கு, இரவு 9 மணிக்கு அம்மன் அழைப்பு, 10 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவம், யானை வாகன காட்சி ஆகியவை நடைபெறவுள்ளன.
இந்நிலையில், முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 1 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முன்னதாக, காலை 6 மணிக்கு மாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல், மதியம் 2 மணிக்கு தோ் வடம் பிடித்தல் நடைபெறுகிறது.
ஏப்ரல் 4-ஆம் தேதி பரிவேட்டை, குதிரை வாகனக் காட்சி, தெப்போற்சவம், காமதேனு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா ஆகியவை நடைபெறவுள்ளன. 5-ஆம் தேதி காலை 7 மணிக்கு மகா தரிசனம், பிற்பகல் 3 மணிக்கு அம்பாள் சப்பரத்தில் புறப்பாடு, இரவு மஞ்சள் நீராடுதல், கொடியிறக்கம் ஆகியவை நடைபெறவுள்ளன.
ஏப்ரல் 8 -ஆம் தேதி காலை 10 மணிக்கு அம்மனுக்கு பாலபிஷேகம், மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.