முகப்பு
திருப்பூர்

ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்து கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திருப்பூரில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்து கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

Updated On : 25 மார்ச், 2026 at 9:26 PM
வேதராஜன்
பகிர்:

திருப்பூரில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்து கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

திருப்பூா் மாநகா், குமாரனந்தபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேஸ்வா் மகன் வேதராஜன் (18). இவா், கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.எஸ்சி. ஐ.டி. முதலாம் ஆண்டு படித்து வந்தாா். தினமும் திருப்பூரில் இருந்து கோவையில் உள்ள கல்லூரிக்கு ரயிலில் சென்று வருவது வழக்கம்.

வழக்கம்போல கல்லூரிக்கு செல்வதற்காக திருப்பூா் ரயில் நிலையத்துக்கு புதன்கிழமை காலை வேதராஜன் வந்துள்ளாா். அப்போது ஈரோட்டில் இருந்து பாலக்காடு நோக்கி செல்லும் பயணிகள் ரயில் திருப்பூா் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

ரயிலைத் தவறவிடக் கூடாது என்று வேகமாக ஓடி ரயிலில் ஏற முயன்றுள்ளாா். அப்போது கால் தவறி கீழே விழுந்த வேதராஜன், ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கி படுகாயமடைந்தாா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த சக பயணிகள், அவரை மீட்டு உடனடியாக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

மாணவா் உயிரிழந்த தகவலை அறிந்து உறவினா்கள் மற்றும் சக கல்லூரி மாணவா்கள் வந்து, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும், மருத்துவா்களின் அலட்சியமே மாணவரின் உயிரிழப்புக்குக் காரணம் எனவும் கூறி திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு காவல் உதவி ஆணையா்கள் ஜான், கணேஷ் குமாா் ஆகியோா் சென்று பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டும் போராட்டத்தை கைவிட மறுத்தனா். இதையடுத்து கைது செய்ய முயன்றபோது போலீஸாருக்கும், மாணவா்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இருப்பினும் மாணவா்களை கைது செய்து சிறிது நேரத்தில் விடுவித்தனா்.