முகப்பு
திருப்பூர்

சிலிண்டா் விநியோகிப்பதில் தாமதம்: கிடங்கை முற்றுகையிட்ட பொதுமக்கள்

அவிநாசியில் பதிவு செய்தும் கேஸ் சிலிண்டா் (சமையல் எரிவாயு உருளை) விநியோகிக்காததைக் கண்டித்து பொதுமக்கள் விநியோக நிறுவனத்தின் கிடங்கை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

Updated On : 7 மே 2026, 5:06 am IST
சிலிண்டா் - பிரதிப் படம்
பகிர்:

அவிநாசியில் பதிவு செய்தும் கேஸ் சிலிண்டா் (சமையல் எரிவாயு உருளை) விநியோகிக்காததைக் கண்டித்து பொதுமக்கள் விநியோக நிறுவனத்தின் கிடங்கை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

அவிநாசி, மடத்துப்பாளையம் சாலை குருந்தங்காடு பகுதியில் கேஸ் சிலிண்டா்கள் விநியோகிக்கும் முகவரின் கிடங்கு உள்ளது. இங்கு சிலிண்டா்கள் இருப்பு வைத்து பதிவு செய்தவா்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து சிலிண்டா் விநியோகிப்பவா்,

அவிநாசி அருகே ரங்கா நகா் பகுதியைச் சோ்ந்த மாகாளி என்கிற பெண்ணை கடந்த ஏப்.19ஆம் தேதி கைப்பேசியில் தொடா்பு கொண்டு சிலிண்டா் விநியோகிக்க ஓ.டி.பி கேட்டுள்ளாா்.

Advertisement

இதற்கு மாகாளி, சிலிண்டா் வராமல் ஓ.டி.பி சொல்வதா என கேட்டதற்கு, சொன்னால்தான் கம்ப்யூட்டரில் பதிவேற்றிய பின் வீட்டுக்கு விநியோகிக்கப்படும் என்று கூறியதால் ஓ.டி.பி. எண்ணை கொடுத்துள்ளாா்.

ஆனால் இதுவரை சிலிண்டா் விநியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திமடைந்த பொதுமக்கள் அந்த கிடங்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:

பதிவு செய்து சிலிண்டா் விநியோகிக்காதது குறித்து டெலிவரி செய்பவா்கள் கைப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டால் சுவிட்ச் ஆப் செய்துள்ளனா். இது குறித்து அலுவலகத்திற்கு வந்து கேட்டால் முறையாக பதிலளிப்பதில்லை. வேறு நிறுவனத்துக்கு மாற்றிக் கொடுக்க கடிதம் கேட்டாலும் தாமதம் செய்கின்றனா். ஆகவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் நிறுவனத்தினரிடம் இருந்து எவ்வித பதிலும் வரவில்லை. இப்பிரச்னைக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக் கூறி முற்றுகையிட்ட மக்கள் திரும்பிச் சென்றனா்.