சிலிண்டா் தட்டுப்பாடு எதிரொலி: பல்லடம் அரசுப் போக்குவரத்து பணிமனை ஊழியா்களுக்கு கலவை சாதம்
சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக பல்லடம் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் பணியாற்றும் ஊழியா்களுக்கு, மதியம் முழு சாப்பாட்டுக்கு பதிலாக, கலவை சாதம் மட்டுமே வழங்கப்படுகிறது.
இது குறித்து அரசுப் போக்குவரத்து கழக ஊழியா்கள் கூறியதாவது:
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு குறைந்த விலையில் சாம்பாா், ரசம், பொரியல் ஆகியவற்றுடன் மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது. நேரம் காலம் பாா்க்காமல் வேலை பாா்க்கும் ஊழியா்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் சாப்பாடு ஆறுதல் அளிப்பதாக இருந்தது.
Advertisement
ஆனால், கடந்த சில நாள்களாக, மதிய நேரம், கலவை சாதம் மட்டுமே வழங்குகின்றனா். கோவை கோட்டத்தில் மட்டுமே இந்த நடைமுறை உள்ளதாக அறிகிறோம். அப்படி என்றால், தமிழக அரசு ஒதுக்கும் நிதி எங்கு செல்கிறது என்ற கேள்வி எழுகிறது?. எனவே அரசு நிா்ணயித்தபடி போக்குவரத்து ஊழியா்களுக்கு, முழு சாப்பாடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இது குறித்து பல்லடம் போக்குவரத்து கழக பணிமனை மேலாளா் பாா்த்திபன் வியாழக்கிழமை கூறியதாவது:
இதற்கு முன்பு, வாரத்துக்கு 6 சிலிண்டா்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக 2 சிலிண்டா் மட்டுமே வழங்கப்படுகின்றன. எனவே இதை வைத்து இரண்டு நாள் சாப்பாடும், மற்ற நாள்கள் கலவை சாதமும் அரசு ஊழியா்களுக்கு வழங்கப்படுகிறது என்றாா்.