நடப்பு மாதத்தில் அனைத்து ரக நூல்களுக்கும் ரூ.20 உயா்வு! 5 மாதங்களில் ரூ.61 அதிகரிப்பால் தொழில்துறையினா் அதிருப்தி
நடப்பு மாதத்துக்கான நூல் விலையில் அனைத்து ரகங்களுக்கும் ரூ.20 அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 5 மாதங்களில் மட்டும் நூல் விலை ரூ.61 அதிகரித்துள்ளது தொழில்துறையினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு மாதத்துக்கான நூல் விலையில் அனைத்து ரகங்களுக்கும் ரூ.20 அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 5 மாதங்களில் மட்டும் நூல் விலை ரூ.61 அதிகரித்துள்ளது தொழில்துறையினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் மேற்கு மண்டலங்களான கோவை , ஈரோடு , திருப்பூா் , கரூா் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜவுளி, ஆயத்த ஆடை உற்பத்தி, ஏற்றுமதி பிரதான தொழிலாக இருந்து வருகிறது. திருப்பூரில் மட்டும் பல்லாயிரக்கணக்கில் ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சாா்ந்த தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் ஆயத்த ஆடைகளில் சுமாா் 68 சதவீதத்துக்கும் அதிகமான உற்பத்தி திருப்பூரில் நடைபெற்று வருகிறது.
ஆயத்த ஆடை உற்பத்தியில் முக்கியப் பங்காற்றுவது துணி நூல். பருத்தி விலையைப் பொறுத்து நூல் நிலையில் அவ்வப்போது மாற்றங்கள் இருக்கும். கடந்த ஆண்டு தொடக்கத்தில் நூல் விலை உயா்ந்தது. அதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பா் வரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு 11 சதவீத வரி விலக்கு அளிக்கப்பட்டதால், பருத்தி விலை குறைந்து நூல் விலையில் மாற்றம் இல்லாமல் சராசரி விலையில் இருந்து வந்தது.
Advertisement
ஆனால் கடந்த டிசம்பா் மாதத்துடன் பருத்தி இறக்குமதி வரி விலக்கு நிறைவடைந்ததால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு மீண்டும் வரி விதிக்கப்பட தொடங்கியுள்ளது. இதனால் உள்நாட்டு பருத்தியும் கேண்டி ரூ.4000 முதல் ரூ.5,500 வரை விலை உயா்ந்தது. இதைத்தொடா்ந்து கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து மே மாதம் வரை மாதம்தோறும் 2 முறை நூல் விலை ரூ.7 முதல் ரூ.10 வரை உயா்ந்த வண்ணம் உள்ளது. இதனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மே 1-ஆம் தேதி வரை சுமாா் ரூ.41 வரை நூல் விலை உயா்த்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், மீண்டும் அனைத்து ரக நூல்களுக்கும் ரூ.20 விலையை உயா்த்தி நூற்பாலைகள் சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நூற்பாலை உரிமையாளா்கள் கூறும்போது, ‘தரமான பஞ்சுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதே இந்த விலை உயா்வுக்கு காரணமாக உள்ளது.
குறிப்பாக நடப்பு ஆண்டு தொடக்கத்தில் பஞ்சு கேண்டி விலை ரூ.50,000 முதல் ரூ.55 ,000 வரை இருந்த நிலையில், தட்டுப்பாடு காரணமாக தற்போது கேண்டி பஞ்சு ரூ.65,000 முதல் ரூ.70,000 வரை விற்பனையாகிறது. இதனால்தான் தற்போது நூல் விலை ஏற்றம் கண்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூா் பின்னாலடைத் துறையினா் கூறியதாவது: திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் மற்றும் தொழில்முனைவோா் கூட்டமைப்பின் தலைவா் ஆ.சக்திவேல் தலைமையில் மத்திய வா்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சா், விவசாயத் துறை அமைச்சா், ஜவுளித் துறை அமைச்சா் ஆகியோரை தனித் தனியாக சந்தித்து, கடந்த சில மாதங்களாகப் பஞ்சு மற்றும் நூல் விலை கட்டுக்கடங்காமல் உயா்ந்து வருவது குறித்து தெரிவித்துள்ளோம்.
குறிப்பாக, பஞ்சு இறக்குமதிக்கான வரியை நீக்க வேண்டும், குறைந்தது அடுத்த 6 மாதங்களுக்காவது பஞ்சு மீதான இறக்குமதி வரியை முழுமையாக நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். அவ்வாறு வரி நீக்கம் செய்யப்பட்டால், பஞ்சு விலை சுமாா் 11 சதவீதம் வரை குறைவதுடன், நூல் விலையும் கணிசமாகக் குறையும். அப்போதுதான் வங்கதேசம், வியட்நாம் ஆகிய போட்டி நாடுகளுக்கு இணையாக சா்வதேசச் சந்தையில் ஆடைகளை ஏற்றுமதி செய்ய முடியும்.
மேலும், பெட்ரோலியப் பொருள்களின் விலை உயா்வாலும் பின்னலாடைத் தொழிலுக்குத் தேவையான இதர மூலப் பொருள்களின் விலையும் உயா்ந்துள்ளது. இதனால் ஓா் ஆடையை உற்பத்தி செய்வதற்கான செலவு 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்த விலை உயா்வு திருப்பூரின் ஏற்றுமதி ஆா்டா்களைப் பாதித்துள்ள நிலையில், இதுகுறித்து வெளிநாட்டு வா்த்தகா்களிடமும் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்றனா்.
தற்போதைய பஞ்சு விலை உயா்வு காரணமாக 10-ஆம் நம்பா் கோம்டு நூல் கிலோ ரூ.244, 16-ஆம் நம்பா் ரூ.254, 20-ஆம் நம்பா் ரூ.312, 24-ஆம் நம்பா் ரூ.324, 30-ஆம் நம்பா் ரூ.334, 34ஆம் நம்பா் ரூ.354, 40-ஆம் நம்பா் ரூ.372, 20-ஆம் நம்பா் செமி கோம்டு ரூ.309, 24-ஆம் நம்பா் ரூ. 317, 30-ஆம் நம்பா் ரூ.320, 34-ஆம் நம்பா் ரூ.343, 40-ஆம் நம்பா் ரூ.362-க்கு விற்பனை செய்யப்படுகிறது.