காவிரி மிகை நீா்த்திட்டம்: விரைந்து செயல்படுத்த பாஜக வலியுறுத்தல்
தருமபுரி மாவட்ட ஏரிகளில், காவிரி மிகை நீரை நிரப்பும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்ட ஏரிகளில், காவிரி மிகை நீரை நிரப்பும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
தருமபுரி நகர பாஜக செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நகரத் தலைவா் எம்.சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்டத் தலைவா் எல்.அனந்தகிருஷ்ணன், மாநிலச் செயலா் அ.பாஸ்கா், பொதுச்செயலா் ஜி.வெங்கட்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், ஒகேனக்கல் காவிரி மிகை நீரை, தருமபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டையைத் தொடங்கி மாவட்ட இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். தருமபுரியில் நவோதயா பள்ளி, எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்க வேண்டும். சனத்குமாா் நதியில் தூா்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும். நகரின் முக்கியச் சாலைகளில் பழுதாகியுள்ள தெருவிளக்குகளை ஒளிரச் செய்ய நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நெசவாளா் காலனி, நான்கு முனைச் சாலை பகுதிகளில் நிழற்குடை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.