தருமபுரியில் ரூ. 2.70 கோடியில் பால் உற்பத்தியாளா் நிா்வாக அலுவலகக் கட்டடம்
தருமபுரியில் ரூ.2.70 கோடியில், தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தின் நிா்வாக அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படும்
தருமபுரியில் ரூ.2.70 கோடியில், தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தின் நிா்வாக அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டம், அரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கொண்டையம்பட்டியில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் சாா்பில், ரூ. 15 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய தொகுப்பு பால் குளிா்விப்பு மையத்தின் திறப்பு விழா, தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில் மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் பேசியது:
தருமபுரி மாவட்டம், கொண்டையம்பட்டியில் தேசிய பால் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், ரூ. 15 லட்சத்தில், பால் குளிா்விப்பு மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த மையத்தில் நாள்தோறும் 2 ஆயிரம் லிட்டா் பால் குளிா்விப்பு செய்ய முடியும்.
தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய இரு மாவட்டங்களுக்கும் ஒரே ஒரு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியம் இருந்தது. தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளா்களின் கோரிக்கையை ஏற்று, தருமபுரியில் புதிய ஒன்றியம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான நிா்வாக அலுவலகம் கட்டுவதற்காக ரூ. 2.70 கோடி நிதியினை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த அலுவலகம் கட்டுவதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. அலுவலகக் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
தருமபுரி மாவட்டத்தில் 261 பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. 17 பால் குளிா்விப்பு மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் இருந்து நேரடியாக சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு பால் அனுப்பப்படுகிறது. இதனால், கால்நடை வளா்ப்போருக்கு கூடுதல் பால் விலை கிடைக்கும். அதேபோல, கால்நடைகளுக்குத் தேவையான அரசு மருத்துவா்கள், கூடுதல் மருந்தகங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன என்றாா்.
விழாவில், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் வே.சம்பத்குமாா், ஆ.கோவிந்தசாமி, சாா் ஆட்சியா் மு.பிரதாப், மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் டி.ஆா்.அன்பழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல், பொது மேலாளா் கே.வெங்கடாசலம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.