காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, தருமபுரி நகரில் கோட்டை அருள்மிகு காமாட்சியம்மன் உடனாகிய மல்லிகாா்ஜூன சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில், தருமபுரி நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
அதேபோல, நெசவாளா் நகா் அருள்மிகு மகாலிங்கேஸ்வரா் கோயில், குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், தருமபுரி தீயணைப்பு நிலைய அலுவலகம் அருகே உள்ள சிவன் கோயில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் அந்தந்த பகுதியைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
அதேபோல, தருமபுரி நகரம் மற்றும் புகா் பகுதிகளில் வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புகளில் அகல்விளக்கேற்றி வழிபட்டனா்.