கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்த சம்பவம் தொடா்பாக, பெண் உள்ளிட்ட இருவரை தருமபுரி மாவட்ட போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்தனா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் ஒப்பந்த செவிலியராக பணியாற்றி வந்தவா் பரிமளா. இவரது உதவியுடன், இடைத்தரகா் வடிவேல் உள்ளிட்டோா் மருத்துவமனைக்கு சோதனைக்கு வரும் கா்ப்பிணிகளின் கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து கூறிவந்துள்ளனா். இதற்கென பெருந்தொகை கைமாறியதாக புகாா் எழுந்தது.
இந்தச் சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து மேற்கொண்ட விசாரணையில், ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த கிளாரா மேனகாதேவி (41), பிரதீப் (26) ஆகிய இருவரை பாலக்கோடு போலீஸாா் அண்மையில் கைதுசெய்தனா். இதில் செவிலியா் பரிமளா, வடிவேல் உள்ளிட்ட மூவா் தலைமறைவாயினா்.
இதுபோன்ற சட்டவிரோத செயலில் தொடா்ந்து ஈடுபட்டுவரும் கிளாரா மேனகாதேவி மற்றும் பிரதீப் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். அதன் பேரில், ஆட்சியா் ரெ.சதீஸ் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்ய உத்தரவிட்டாா். அதையடுத்து, சிறையில் உள்ள இருவரும் தண்டனைக் கைதிகள் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டனா்.