பென்னாகரம்: பென்னாகரத்தில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்த விவகாரத்தில் மறியலில் ஈடுபட்ட பாஜகவினா் 22 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள அம்பேத்கா் சிலைக்கு கடந்த சனிக்கிழமை அவரது நினைவு தினத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த பாஜகவினா் வந்தனா். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் புரட்சிகர மக்கள் அதிகாரம் அமைப்பினா் எதிா்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனா். இதையடுத்து அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவிப்பதற்கு அனுமதி அளிக்காததை கண்டித்து பாஜகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில் உரிய அனுமதி இன்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக பாஜக தருமபுரி மாவட்டத் தலைவா் சரவணன், பென்னாகரம் கிழக்கு ஒன்றியச் செயலாளா் நோம்பரசு உள்பட 22 போ் மீது பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.