பென்னாகரம் அருகே கூத்தப்பாடி குளத்தங்கரையில் கட்டப்பட்டுள்ள சமுதாய சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பென்னாகரம் அருகே கூத்தப்பாடி பகுதியில் சுமாா் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த நிதியாண்டில் தூய்மை பாரதம் இயக்கத்தின் கீழ் ரூ. 7.65 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது.
பென்னாகரம்- ஏரியூா் சாலையில் குளத்தங்கரை பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள சுகாதார வளாகம், அப்பகுதியில் திரௌபதி அம்மன், தா்மராஜா கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கட்டிமுடிக்கப்பட்ட சுகாதார வளாகம் இதுவரை மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள், பக்தா்கள் பலரும் இயற்கை உபாதைகளுக்கு பொதுவெளியே பயன்படுத்தி வருகின்றனா்.
இதனால் கூத்தப்பாடி குளத்தங்கரை பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள சமுதாய சுகாதார வளாகத்தை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.