கோட்டப்பட்டி - சிட்லிங் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, கிராம மக்கள் சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கோட்டப்பட்டி - சிட்லிங் தாா்சாலை 8 கி.மீ. தொலைவு கொண்டது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த வழித்தடத்தில் சேலம், திருவண்ணாமலை, ஆத்தூா், அரூா் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கோட்டப்பட்டி முதல் சிட்லிங் வரையிலான தாா்சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற வகையில் உள்ளதால், இந்த வழித்தடத்தில் அரசு, தனியாா் பேருந்துகள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் சென்றுவருவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன.
இச்சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் தொடா்ந்து வலியுறுத்திய தையடுத்து, தமிழக அரசு ரூ. 13 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் விடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சாலை சீரமைப்பு பணிக்கு வனத்துறை சாா்பில் அனுமதி வழங்கவில்லை என தெரிகிறது.
இதையடுத்து, வனத்துறையைக் கண்டித்து கோட்டப்பட்டி - சிட்லிங் சாலையில் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்த அரூா் கோட்டாட்சியா் செம்மலை பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதில், சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் அளித்த உறுதியின் பேரில், சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் காரணமாக கோட்டப்பட்டி, சிட்லிங் - சேலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.