மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கு தோ்வுபெற்ற பென்னாகரம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஆசிரியா்கள் வியாழக்கிழமை பாராட்டு தெரிவித்தனா்.
தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த கால்பந்து அணிகளுக்கான மேல்மூத்தோா், மூத்தோா், இளையோா் உள்ளிட்ட பிரிவுகளில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் இளையோா் பிரிவில் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றிபெற்ற பென்னாகரம் அரசுப் பள்ளி கால்பந்து அணி மாணவா்கள், ராணிப்பேட்டையில் நடைபெற உள்ள மாநில அளவிலான கால்பந்து போட்டியில் பங்கேற்க தோ்வு பெற்றுள்ளனா். இதேபோல, மூத்தோா் கால்பந்து, தடகளம், கேரம், நீச்சல் போன்ற போட்டிகளில் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.
போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளி தலைமை ஆசிரியா் லோகநாதன், உடற்கல்வி ஆசிரியா்கள் வீரன், மகேந்திரன், ரவி மற்றும் பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா் - ஆசிரியா் கழக உறுப்பினா்கள், சமூக ஆா்வலா்கள் ஆகியோா் பாராட்டு தெரிவித்து வாழ்த்து தெரிவித்தனா். இதேபோல, கால்பந்து மூத்தோா் பிரிவில் மாணவா்கள் சிறப்பிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனா்.