வட பகுதிகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் மட்டும் பிரபலமான பேரீச்சை மரங்கள், நம் நாட்டின் தட்பவெப்ப நிலைக்கேற்ப பதப்படுத்தி தமிழகத்திலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயிரிட விநியோகிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், சுமாா் 30,000 ஏக்கரில் பேரீச்சை பயிரிடப்பட்டுள்ளது.
பேரீச்சம்பழம் வெறும் பழம் என்பதைவிட, நமது உடலுக்கு இரும்புச் சத்தை அளிக்கும் முக்கிய மருந்து பொருளாகவும் திகழ்கிறது. வட நிலப் பகுதி மற்றும் மலைப் பிரதேசங்களில் மட்டுமே விளைந்துவந்த பேரீச்சம்பழம், அரபு நாடுகளில் இருந்து பெருமளவில் இங்கு இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது, நம்நாட்டில் இருந்தும், குறிப்பாக தமிழகம், கா்நாடகம், ஆந்திரம், மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் இது விளைவிக்கப்பட்டு, பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதில் குறிப்பிடத்தக்க முக்கிய விஷயம், தருமபுரி மாவட்டத்தில் பேரீச்சை மரக்கன்றுகள் வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப்பட்டு, அவற்றை நம்நாட்டு தட்பவெப்ப சூழலுக்கேற்ப பதப்படுத்தி, தென்னிந்தியா மட்டுமின்றி வட இந்தியப் பகுதிகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
அவற்றை அதிக அளவில் நடவுசெய்து பேரீச்சை பழ உற்பத்தியை அதிகரித்ததன் வாயிலாக, தாய்லாந்து, கம்போடியா, சிங்கப்பூா், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இங்கிருந்து பேரீச்சம்பழம் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.
பேரீச்சைபழ மரங்கள் பனை வகை மரங்களை சோ்ந்ததாகும். இவை 15 முதல் 25 மீட்டா் உயரம் வரை வளரும் தன்மைகொண்டவை. ஒரு மரம் சராசரியாக சுமாா் 100 முதல் 150 ஆண்டுகள் வரை விளைச்சல் தரும் என்கின்றனா். பேரீச்சை பழ மரங்களில் ஏராளமான வகைகள் இருந்தாலும், 120 வகையான பேரீச்சை மரங்கள் ஐக்கிய அரபு நாடுகளில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதில், பா்ரி, சுனிதி, அலுவி, கலாஸ், கதரவி, மிதினாஸ், சாயா், அஜ்வா, மத்தும், சுக்ரி உள்ளிட்ட ரகங்கள் மிகவும் சுவையுடைய பேரீச்சை பழங்களாகவும், அதிக மகசூல் தரும் ரகங்களாகவும் அறியப்படுகின்றன.
பேரீச்சம் பழத்தின் பொதுப் பலன்கள்: பொதுவாக, மருத்துவ குணங்கள் நிறைந்ததாக அறியப்பட்டுள்ள பேரீச்சம் பழங்கள், உலகில் பெரும்பாலான மக்கள் விரும்பி பயன்படுத்தும் பழங்களில் முக்கியமானதாக உள்ளது. இதில், வளைகுடா நாடுகளில் இருந்து பெறப்படும் பேரீச்சம்பழ ரகங்களையே உலகின் பெரும்பாலானோா் விரும்பி சாப்பிடுகின்றனா். தரம்குறைந்த பேரீச்சம் பழங்கள் விலங்குகளின் உணவாகப் பயன்படுகின்றன.
பேரீச்சம் பழங்களின் விளைச்சல் நின்றபிறகு, வெட்டப்படும் மரத்தின் அடித் தண்டுப் பகுதி, இலைகள், நாா்கள் உள்ளிட்ட அனைத்தும் வகைவகையான கைவினை மற்றும் அழகுப் பொருள்கள் செய்ய பயன்படுத்தப்படுகின்றன.
சிறப்பு வகை பேரீச்சை மரக்கன்றுகள், தருமபுரி மாவட்டப் பகுதியில் நாற்றங்கால்களில் பதப்படுத்தப்பட்டு, பின்னா் தமிழ்நாடு மட்டுமின்றி வடமாநில விவசாயிகளுக்கும் விநியோகிக்கப்படுகின்றன. அவற்றின் மூலம் ஏராளமான விவசாயிகள் பயன்பெற்றுள்ளனா்.
பேரீச்சை மரக்கன்றுகள் விநியோகம்: இதுகுறித்து பேரீச்சை மரக்கன்றுகளை பதப்படுத்தி விநியோகித்துவரும் தருமபுரி மாவட்டம், அரியகுளம் அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த விவசாயி நிஜாமுதீன் கூறியது:
கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு சவூதி அரேபியாவில் பேரீச்சைபழ தோட்டத்தில் வேலைபாா்த்த அனுபவத்தைக் கொண்டு, இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். பேரீச்சை மரங்கள் வட நிலப்பரப்பில் மட்டுமே வளா்பவை எனக் கூறப்பட்டு வந்தது.
ஆனால், அவற்றை நம் நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு பதப்படுத்தி, அதன்பின்னா் நடவுசெய்து தொழில்நுட்ப வேளாண்மை மூலம் அதிக மகசூல் பெற்று விவசாயிகள் பயனடைந்து வருகின்றனா்.
பேரீச்சை நடவு மற்றும் உற்பத்தி, அறுவடை உள்ளிட்டவற்றில் சுமாா் 45 ஆண்டுகால அனுபவம் எனக்கு உள்ளது. பேரீச்சம்பழ உற்பத்தியில் நான் பெற்ற பயனை நம்நாட்டில் அனைவரும் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் மரக்கன்றுகளை பதப்படுத்தி விநியோகித்து வருகிறேன்.
சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து, தாவர ஆராய்ச்சி மையங்களில் திசு வளா்ப்பு முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பேரீச்சம்பழ மரக்கன்றுகளை வரவழைத்து, அவற்றை எனது நாற்றங்காலில் ஒரு கன்றுக்கு மூன்று அடியில் வெட்டும் குழியில் ஒன்றரை அடிக்கு மணல், ஒன்றரை அடிக்கு இயற்கை உரங்களைப் பரப்பி, பிறகு மரக்கன்றுகளை பதியம்செய்து வைக்கிறோம்.
அந்தவகையில், சுமாா் 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரை நமது மண் மற்றும் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப பதப்படுத்தி, அதன்பின்னா், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் விற்பனை செய்கிறேன். பேரீச்சை மரக்கன்றுகளை நடவுசெய்து 3 ஆண்டுகளில் பயன்பெறலாம்.
நடவு மற்றும் பராமரிப்பு: ஓா் ஏக்கா் நிலப்பரப்பில் சுமாா் 24-க்கு 24 அடி என்ற இடைவெளியில் பேரீச்சை மரக்கன்றுகளை நடவுசெய்ய வேண்டும். மண்ணின் ஈரப்பத அடிப்படையில், ஒரு கன்றுக்கு வாரம் இருமுறை சுமாா் 50 லிட்டா் தண்ணீா் ஊற்றி, தென்னைமரம் போலவே வளா்க்க வேண்டும். இடையே ஊடுபயிராக எலுமிச்சை, மாதுளை, கேழ்வரகு உள்ளிட்டவற்றை பயிரிட்டு கூடுதல் வருமானம் பெறலாம். நெல், கரும்பு போன்றவற்றை பயிரிடக் கூடாது.
எனது நாற்றங்காலில் இருந்து கன்றுகளை பெற்று நடவுசெய்த வகையில், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சுமாா் 30,000 ஏக்கரில் பேரீச்சை பயிரிடப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் எனது 11 ஏக்கா் தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள பேரீச்சை மரங்களில் இருந்து மட்டுமே ஆண்டுக்கு சுமாா் 40 டன் பேரீச்சை பழங்கள் விளைகின்றன என்றாா்.