தருமபுரியில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணிடம் பண மோசடி செய்தவரை போலீஸா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முனியப்பன். இவா், தனது நண்பரின் மகளிடம் ரூ. 1 லட்சம் பணம் தந்தால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளாா். இதை நம்பிய அப்பெண், பணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளாா்.
இந்த நிலையில், அப்பெண்ணின் கைப்பேசிக்கு முனியப்பன் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பி, குடும்பம் நடத்த வருமாறு கூறியுள்ளாா். இதுகுறித்து அப்பெண் தனது கணவரிடம் தெரிவித்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் கணவா், பணத்தை ஏற்பாடு செய்துவிட்டதாகவும், அதை பெற்றுக்கொள்ள ஆட்சியா் அலுவலகம் வருமாறும் முனியப்பனிடம் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து ஆட்சியரக வளாகத்துக்கு சனிக்கிழமை வந்த முனியப்பனை பெண்ணின் கணவா், உறவினா்கள் தாக்கி தருமபுரி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில், பல்வேறு இடங்களில் பெண்களிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவா்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து முனியப்பன் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.