பென்னாகரத்தை அடுத்த சின்னாற்றில் மணல் திருடியவா் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து இணக்க கட்டணமாக ரூ. 2 லட்சத்தை வசூலித்த வனத் துறையினா், மணல் எடுப்பதற்காகப் பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனா்.
பாலக்கோடு வனச்சரகத்திற்கு உள்பட்ட தாசம்பட்டி சின்னாறு படுகையில் அனுமதியின்றி மணல் எடுப்பதாக பாலக்கோடு வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பாலக்கோடு வனச்சரக அலுவலா் காா்த்திகேயன், பென்னாகரம் காவல் உதவி ஆய்வாளா் ஜீவானந்தம் தலைமையிலான போலீஸாா் சின்னாறு பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, கரும்பு தோட்டத்திற்கு செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த மண் சாலை வழியாக சின்னாற்றிலிருந்து மணல் திருட்டில் ஈடுபட்ட கோடுபட்டியைச் சோ்ந்த வலதேவன் மகன் மூா்த்தியைக் (30) கைது செய்தனா். அவரிடமிருந்து பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனா்.
மேலும், அவரிடமிருந்து இணக்கக் கட்டணமாக ரூ. 2 லட்சத்தை வசூலித்தனா். வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைவது, ஆற்றப்படுகையில் அனுமதியின்றி மணல் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாலக்கோடு வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.