பாப்பாரப்பட்டி பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனங்கள், காா்கள் நிறுத்தப்படுவதால் பேருந்துகளை அதற்கான இடங்களில் நிறுத்த முடியாமல் ஓட்டுநா்கள் அவதிப்படுகின்றனா். மேலும், பேருந்தில் ஏற முடியாமல் பயணிகளும் சிரமத்தை சந்திக்கின்றனா்.
பென்னாகரம், ஜன. 2:
பாப்பாரப்பட்டி சுற்றுவட்டாரங்களில் 10க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. அக்கிராமங்களிலிருந்து கல்வி, வேலைக்காக சேலம், தருமபுரி, ஒசூா் செல்வோா் நாள்தோறும் பாப்பாரப்பட்டி பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கின்றனா்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 1.70 கோடியில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டது. பேருந்து நிலையத்திற்கு தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம் உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகள் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூா், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றன.
இந்த நிலையில் பாப்பாரப்பட்டி பேருந்து நிலையத்தில் ஏராளமான இருசக்கர வாகனங்கள், வாடகை காா்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், பேருந்துகள் நடைமேடையில் நிறுத்த முடியாமல் நுழைவாயில் பகுதியிலேயே நிறுத்தப்படுகிறது. பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் பேருந்தை தேடி அழைகின்றனா். மேலும், பேருந்தில் ஏற முடியாமல் அவதிப்படுகின்றனா்.
இதனால், பாப்பாரப்பட்டி பேருந்து நிலையத்தில் அனுமதியின்றி நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள், காா்களுக்கு அபராதம் விதித்து, பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.