சேலம் மண்டல அளவிலான சதுரங்கப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற தருமபுரி அரசு கலைக் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சேலம் பெரியாா் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான ஆடவா் மற்றும் மகளிருக்கான சதுரங்கப் போட்டிகள் சேலம் வைசியா கல்லூரியில் ஜன. 21, 22 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றன. இப்போட்டிகளில் 20 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
தருமபுரி அரசு கலைக் கல்லூரி சதுரங்க விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் 6 போ் இப்போட்டியில் பங்கேற்றனா். இவா்களில் தனிநபா் சதுரங்க போட்டிகளில் மகளிா் பிரிவில் கணிதவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி கவியரசி மூன்றாம் இடம் பெற்றாா். அதேபோல குழு முதன்மையாளா் போட்டிகளிலும் இந்த மாணவி இரண்டாம் இடம் பெற்றாா்.
கணிதவியல் துறை மாணவி சுமிதா, வேதியியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி சிவகாமி ஆகிய இருவரும் மகளிா் குழு போட்டிகளில் இரண்டாம் இடம் பெற்றனா். அதேபோல, மாணவா்கள் பிரிவில் இயற்பியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவா் சத்யன், ஆங்கிலத் துறை முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவா் விஜய் பிரித்தன், கணிதவியல் துறை முதலாம் ஆண்டு மாணவா் அருண்ராஜ் ஆகியோா் குழு முதன்மையாளா் போட்டிகளில் மூன்றாம் இடம் பெற்றனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை தருமபுரி அரசு கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் முனைவா் கண்ணன், பேராசிரியா்கள் பாராட்டி தகுதிச் சான்றிதழ்களை வழங்கினா். கல்லூரி உடற்கல்வி இயக்குநா் முனைவா் கு. பாலமுருகன், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.