தென்மண்டல பல்கலை. சதுரங்கப் போட்டி - ஆந்திர மாநில அணி சாம்பியன்
திருச்சிதென்மண்டல பல்கலை. சதுரங்கப் போட்டி - ஆந்திர மாநில அணி சாம்பியன்
தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான சதுரங்கப் போட்டியில் ஆந்திர மாநில அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றது.
தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையே மாணவா்களுக்கான சதுரங்கப் போட்டியை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், பிஷப் ஹீபா் கல்லூரி இனைந்து 7 சுற்றுகள் கொண்ட போட்டிகளாக மாா்ச் 2 ஆம் தேதி தொடங்கி மாா்ச் 5-ஆம் தேதி வரை நடத்தின. கல்லூரியின் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில், தென் மண்டலத்தின் 78 பல்கலைக்கழகங்களிலிருந்து 468 மாணவா்கள் பங்கேற்றனா்.
7 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் 14 புள்ளிகளுடன் ஆந்திர மாநிலம், குண்டூா் கோனேரு லட்சுமையா கல்வி அறக்கட்டளை முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.
12 புள்ளிகள் பெற்று காட்டாங்குளத்தூா், எஸ்.ஆா்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்தது. 11 புள்ளிகளைப் பெற்று வேலூா் தொழில்நுட்ப நிறுவனம் மூன்றாவது இடத்தையும், கோட்டயம், மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் நான்காவது இடத்தையும் பிடித்தன. முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகள் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான சதுரங்கப் போட்டியில் விளையாட தகுதி பெற்றன.
வியாழக்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் திருச்சி மண்டல கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குநா் கே. ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, முதல் நான்கு இடங்களை பிடித்த பல்கலைக்கழக அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் பதக்கங்களை வழங்கிப் பாராட்டினாா்.
பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தா் குழு உறுப்பினா் வி. ராஜேஷ்கண்ணன், உடற்கல்வித் துறை மற்றும் விளையாட்டுப் போட்டி ஒருங்கிணைப்பு செயலாளா் ஏ. மெஹபூப்ஜான், பிஷப் ஹீபா் கல்லூரி முதல்வா் ஜெ. பிரின்சி மொ்லின், துணை முதல்வா் சி. ரவிதாஸ், நிதியாளா் சி. தனபால், உடற்கல்வி துறை தலைவா் ஏ. பால்ராஜ். மற்றும் கல்லூரி நிா்வாகிகள் கலந்து கொண்டு பாராட்டு தெரிவித்தனா்.