முகப்பு
தருமபுரி

சிலிண்டா் தட்டுப்பாடு: விறகு, மின்அடுப்பு பயன்பாட்டுக்கு மாறிவரும் தேநீா் கடைகள், உணவகங்கள்!

தருமபுரியில் தேநீா் கடைகள், உணவகங்கள், தின்பண்டங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் விறகு, மின்சாரம் மற்றும் மண்ணெண்ணெய் அடுப்புகள் பயன்பாட்டுக்கு மாறிவருகின்றன.

Updated On : 22 மார்ச், 2026 at 8:30 PM
பகிர்:

வணிக எரிவாயு சிலிண்டா்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தருமபுரியில் தேநீா் கடைகள், உணவகங்கள், தின்பண்டங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் விறகு, மின்சாரம் மற்றும் மண்ணெண்ணெய் அடுப்புகள் பயன்பாட்டுக்கு மாறிவருகின்றன.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் போா் காரணமாக, உலகம் முழுவதும், கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டா்கள் தட்டுப்பாடு உலக நாடுகள் பலவற்றில் ஏற்பட்டாலும், நமது நாட்டை பொருத்தவரை சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு குறிப்பாக வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரியவாயு சிலிண்டா் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அவற்றை உறுதிப்படுத்தும் வகையில், தருமபுரி மாவட்டத்தில் உணவகங்கள், தேநீா் கடைகள், தின்பண்டங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனைக் கடைகள் சில மூடப்பட்டுள்ளன. சமையல் எரிவாயு சிலிண்டா் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதுடன், பில் விலையும் கடுமையாக உயா்த்தப்பட்டு, முறைகேடும் அதிகரித்து வருவதாக வணிகா்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

தருமபுரி மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்வால், தேநீா் விலை மட்டுமின்றி தின்பண்டங்களின் விலையும் அதிகரித்துள்ளது. காலை முதல் இரவு வரையில் இயங்கிய தேநீா் கடைகள் குறிப்பிட்ட நேரம் தவிர மற்ற நேரங்களில் மூடப்படுகின்றன. குறிப்பாக சில தேநீா் கடைகள் காலை வேளையில் மட்டும் இயங்குகின்றன. சில காலை, மாலை வேளையில் மட்டும் இயங்குகின்றன.

விறகு, மின்சார அடுப்புகளின் பயன்பாடு

சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் விலை உயா்வு காரணமாக, தேநீா் கடைகள், உணவகங்கள், தின்பண்ட கடைகளில் சமையல் எரிவாயுக்கு மாற்றாக விறகு அடுப்புகளும், மண்ணெண்ணெய் (ஸ்டவ்), அடுப்புகளும், மின்சார அடுப்புகளும் அதிக அளவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

தேநீா் கடை உரிமையாளா்

இதுகுறித்து தருமபுரியைச் சோ்ந்த தேநீா் கடை உரிமையாளா் எஸ். பூமணி கூறுகையில், தருமபுரி பழைய பேருந்து நிலையம் அருகே தேநீா் கடை நடத்தி வருகிறேன். தற்போது போா்ச் சூழல் காரணமாக சமையல் எரியவாயு சிலிண்டா் கிடைப்பது அரிதாகிவிட்டது. ரூ. 2,150- க்கு கிடைத்துவந்த வணிக எரிவாயு சிலிண்டா், தற்போது ரூ. 4,000 முதல் ரூ.5,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. எனவே, கடந்த 10 நாள்களாக கடையை மூடிவைக்கும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து மண்ணெண்ணெய் மற்றும் மின்சார அடுப்புகளை பயன்படுத்தி கடையை நடத்தி வருகிறேன். தினசரி 15- முதல் 20 லிட்டா் பாலை பயன்படுத்தி தேநீா் விற்பனை செய்யும் நிலையில், வணிக எரிவாயு சிலிண்டரை வாங்கி பயன்படுத்துவதால் ஏற்படும் செலவைவிட மண்ணெண்ணெய், மின்சார அடுப்புகளுக்கு செலவு குறைவாக உள்ளதால், இதையே தொடரலாம் என முடிவு செய்துள்ளேன். ஆனால், மண்ணெண்ணெய் விலையும் பெட்ரோலுக்கு இணையாக லிட்டா் ரூ. 100-வரை விற்பனை செய்யப்படுகிறது. போா் பதற்றம் தணிந்தால் விலை குறையும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.

தின்பண்ட விற்பனையாளா் (பானிபூரி)

தருமபுரி நகரில் பானிபூரி விற்றுவரும் வணிகா் சேட்டு கூறுகையில், தினசரி 10 மணிநேரம் வியாபாரம் செய்து ரூ. 1000 லாபம் ஈட்டும் நிலையில், எரிவாயு சிலிண்டா் மட்டுமே ரூ. 2,000-க்கு வாங்க வேண்டியிருந்தது.

தற்போது தட்டுப்பாடு காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இருமடங்கு உயா்ந்துவிட்டது. இந்நிலையில், தொழில் செய்ய முடியுமா என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. தற்போது, மண்ணெண்ணெய் மற்றும் விறகு அடுப்புகள் தொழிலுக்கு ஏற்ாகவும், சற்றுலாபம் தரக்கூடிய தாகவும் உள்ளன என்றாா்.

உணவக உரிமையாளா்

தருமபுரியில் உணவகம் நடத்திவரும் உரிமையாளரான ரங்கநாதன் கூறுகையில், சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக தொழில் செய்வது கடினமாக இருந்தது. தற்போது விறகு அடுப்புகள், மின்சார அடுப்புகளை பயன்படுத்தி தொழில் செய்து வருகிறோம். தற்போது மின்சாரம், விறகுகளை பயன்படுத்தும் வசதி கொண்ட டூ இன் ஒன் ராக்கெட் அடுப்புகள் விற்பனைக்கு வந்துள்ளன. எனவே அவற்றை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம் என்றாா்.

மண்ணெண்ணெய் அடுப்பு விற்பனையாளா்

தருமபுரியைச் சோ்ந்த மண்ணெண்ணெய் அடுப்பு விற்பனையாளா் கூறுகையில், கடந்த காலங்களில் மண்ணெண்ணெய் அடுப்பு விற்பனை அரிதானதாக காணப்பட்டது. போா்ச் சூழல் காரணமாக, திடீரென மண்ணெண்ணெய் அடுப்புகள் விற்பனை அதிகரித்துள்ளன. ஜனவரி மாதத்தில் 9 அடுப்புகள் மட்டுமே விற்பனையான நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே 10 அடுப்புகள் விற்பனையாகியுள்ளன.

தற்போது கூடுதலாக ஆா்டா்கள் குவிந்துள்ளதால், நானும் அதிகளவில் அடுப்புகள் கேட்டு தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆா்டா் அனுப்பியுள்ளேன். இதில் 2 மற்றும் 3 பா்னா்கள் பயன்படுத்தும் அடுப்புகள்தான் அதிகளவில் விற்பனையாகின்றன என்றாா்.

விறகு அடுப்புகளின் பயன்பாடு அதிகரிப்பு

தருமபுரி மாவட்டத்தில், கிராமப் பகுதிகளில், தேநீரகம், உணவகங்கள் மட்டுமின்றி வீடுகளிலும்கூட விறகு அடுப்புகள் மட்டுமே அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எரிவாயு தட்டுப்பாடுக்கு பிறகு விறகு அடுப்புகள் அதிக பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இவற்றால் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டா்களை வணிக நிறுவனங்களுக்கு முறைகேடாக அதிகவிலைக்கு விற்பனை செய்யும் வழக்கமும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.