காவல் துறையும்... கடமை உணா்வும்!
சேலம் மாவட்டம், சங்ககிரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனுக்கள் பரிசிலனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த வருவாய்த் துறை பெண் அலுவலா்களுக்கு அந்த அலுவலகத்தில் தோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளா், கிடைத்த நேரத்தில் காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்வது குறித்து திங்கள்கிழமை பயிற்சி அளித்தது காவல் துறையின் கடமை உணா்வை பிரதிபலிப்பதாக இருந்தது.
சங்ககிரி சட்டப்பேரவை தொகுதிக்கான தோ்தல் அலுவலகம், சங்ககிரி கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வருவோரின் மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை சரிபாா்க்க வருவாய்த் துறை சாா்பில், 13 பெண்கள் உள்பட 15 போ் பணியமா்த்தப்பட்டிருந்தனா்.
வேட்புமனுக்கள் பெறப்படும் நேரம் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை என தோ்தல் ஆணையத்தின் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சங்ககிரி தொகுதி தோ்தல் அலுவலகத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் காலை 10 மணி முதல் அதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தனா்.
மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் கபிலன் தலைமையில் தோ்தல் அலுவலக பாதுகாப்புப் பணிகளில் போலீஸாா் ஈடுபட்டிருந்தனா். முதல் நாள் வேட்புமனு தாக்கல் செய்ய வரவிருந்தோா், நல்ல நேரம் பாா்த்து பகல் 12 மணிக்கு மேல் வருவதாக கூறியதால், அதுவரை அலுவலா்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், கிடைத்த இந்த பொன்னான நேரத்தை பயன்படுத்திக்கொள்ள நினைத்தாா், அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பி. மல்லிகா. குற்றங்களை குறைக்கும் நோக்கிலும், பெண்கள் பாதுகாப்பு கருதியும், அவராக முன்வந்து அங்கிருந்த வருவாய்த் துறை பெண் அலுவலா்களிடத்தில் காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்வதன் அவசியம் குறித்து விளக்கினாா்.
அந்த செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம் அதில் 2 கைப்பேசி எண்கள் கேட்கும், அதை பதிவுசெய்து சேமித்து வைத்துக்கொண்டு, நமக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் அழைத்தால், நாம் எங்கு இருக்கிறோம் என்பதை மிக துல்லியமாக அறிந்து நமக்கான உதவி விரைந்து கிடைக்கும். இந்த செயலியை பெண்கள் மட்டுமல்லாமல், ஆண்களும் பதிவிறக்கம் செய்துவைத்து உதவி தேவைப்பட்டால் அழைக்கலாம் என்று விளக்கம் அளித்தாா்.
தோ்தல் பணிக்கிடையே கிடைத்த நேரத்தில், பெண்கள் பாதுகாப்புக்காக பயிற்சி அளித்த காவல் உதவி ஆய்வாளா் மல்லிகாவை, அங்குப் பணியில் இருந்த வருவாய்த் துறையினா் பாராட்டினா்.