தருமபுரி

கொல்லிமலை மாற்றுப்பாதை திட்டத்துக்கு பச்சைக் கொடி

ராசிபுரம், டிச. 8: மத்திய, மாநில அரசுகளின் அனுமதி கிடைத்துள்ளதையடுத்து, கொல்லிமலைக்கு மாற்றுப்பாதை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மலைவாழ் மக்களின் 40 ஆண்டு கால

ஆர். ரமேஷ் கிருஷ்ணன்

ராசிபுரம், டிச. 8: மத்திய, மாநில அரசுகளின் அனுமதி கிடைத்துள்ளதையடுத்து, கொல்லிமலைக்கு மாற்றுப்பாதை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் மலைவாழ் மக்களின் 40 ஆண்டு காலக் கனவு நிறைவேறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இயற்கை எழில் கொஞ்சும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள கொல்லிமலை சுற்றுலாப் பயணிகளின் மனங்கவர்ந்த இடமாகும். இங்கு மொத்தம் 14 மலைக் கிராமங்கள் உள்ளன.

நாமக்கல் மற்றும் ராசிபுரம் வட்டத்தில் இடம்பெறும் இந்த கிராமங்களில் சுமார் 40 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இவர்களில் கணிசமானோர் விவசாயிகள். இங்கு சாமை, நெல்,  மரவள்ளி, மிளகு, அன்னாசி, மா, பலா போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

மலை உச்சிக்குச் செல்ல அடிவாரப் பகுதியான காரவள்ளியில் இருந்து, சுமார் 60 கி.மீ. தொலைவுக்கு 74 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து செல்ல வேண்டும். இதனால் ராசிபுரம் வட்டத்தைச் சேர்ந்த சித்தூர் நாடு, பெரக்கரை நாடு, பைல்நாடு, எடப்புளி நாடு உள்ளிட்ட 10 மலைக் கிராமங்களைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள முள்ளுக்குறிச்சி பகுதிக்குச் செல்ல சோழக்காடு, காரவள்ளி, காளப்பநாயக்கன்பட்டி வழியாக சுமார் 90 கி.மீ. தொலைவை சுற்றிச் செல்ல வேண்டியிருக்கிறது. இதனால் காலதாமதம் ஏற்படுவதுடன், விளைபொருள்களை மற்ற பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்கு அதிகப்படியான செலவும் ஏற்படுகிறது.

இதனால் நரியன்காடு, பூசணிக்குழி முதல் முள்ளுக்குறிச்சி வரை மாற்றுப்பாதை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இப்பாதை அமைக்கப்பட்டால், நரியன்காட்டில் இருந்து முள்ளுக்குறிச்சியை 7.5 கி.மீ. தொலைவில் சென்றடைய முடியும். இதனால் மலையில் விளையும் குச்சிக் கிழங்கு மற்றும் கனி வகைகளை எளிதில் மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லலாம்.

ஆனால் இந்த மாற்றுப்பாதை திட்டத்திற்கு மத்திய வனத்துறை ஏராளமான கட்டுப்பாடுகள் விதித்ததால் திட்டத்தை நிறைவேற்றுவதில் கால தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் இத்திட்டத்துக்கு உச்ச நீதிமன்றத்தின் அனுமதியும் வேண்டியிருந்தது. இறுதியாக 2010-ம் ஆண்டு ஏப்ரல் 8-ல் கொல்லிமலைக்கு மாற்றுப் பாதை அமைக்க உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது.

மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையும் 7.5.2010-ல் மலைப்பாதைக்கு அனுமதியளித்தது. இதனால் மாற்றுப்பாதை திட்டத்திற்கு ரூ.11 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இறுதியாக தமிழக அரசின் வனத்துறையும் கடந்த 23.11.11-ல் இந்த பாதைக்கு அமைக்க இறுதி ஆணை பிறப்பித்தது. இதனால் மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பணிகள் இன்னும் ஒரிரு வாரத்தில் தொடங்கும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஜெ. குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நரியன்காடு-முள்ளுக்குறிச்சி மாற்றுப்பாதை திட்டம் நிறைவேற்றப்படுவதன் மூலம் மலைவாழ் மக்களும், சுற்றுலா பயணிகளும் மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள். சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என கொல்லிமலை ஊராட்சிக்குழுத் தலைவர் சி. சந்திரசேகரன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT