பெரியாரின் அறவழியே சமூக மாற்றத்தை உருவாக்கும்: கனிமொழி
திருச்சி, ஜன. 8: பெரியாரின் அன்பு வழி, அறவழியே சமூக மாற்றத்தை உருவாக்கும் என்றார் மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி. திருச்சியில் நடந்துவரும் உலக நாத்திகர் மாநாட்டின் 2 ஆம் நாளான சனிக்கிழமை இரவு
திருச்சி, ஜன. 8: பெரியாரின் அன்பு வழி, அறவழியே சமூக மாற்றத்தை உருவாக்கும் என்றார் மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி.
திருச்சியில் நடந்துவரும் உலக நாத்திகர் மாநாட்டின் 2 ஆம் நாளான சனிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
அறிவுத் தேடல் இருக்க வேண்டும் என்பதுதான் நாத்திகம். ஆனால், மாற்றுக் கருத்தை கண்மூடித்தனமாக நிராகரிப்பதுதான் மதம். என்ன செய்ய வேண்டும்? என்ன படைக்க வேண்டும்? என்ன சிந்திக்க வேண்டும்? என்ன படிக்க வேண்டும்? என மக்களுக்குச் சொல்லும் சர்வாதிகாரிகளாக மதத் தலைவர்கள் மாறிவிட்டிருக்கின்றனர்.
மாற்றுக் கருத்துக்கு இப்போது கடுமையான எதிர்ப்புகள் உருவாகியிருக்கின்றன. பெரியார் காலத்தில்கூட இந்தளவுக்கு அச்சுறுத்தல்கள் இல்லை. படைப்புத் தளங்கள் சுருங்கி வருகின்றன. "தலிபானைஷேசன்' நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு நாளும் நம்மை நாம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்காகச் சிந்திக்க வேண்டும். ஜாதி, மதத்தை விட்டு திருமணம் செய்து கொள்வது பெரிய துரோகம் என்று கருதப்படுகிறது. அதையொட்டி கெüரவக் கொலைகளும் நடைபெறுகின்றன.
அன்பு, சுயமரியாதை இவற்றைப் படிப்பிக்கும் பெரியார் வழிதான் மாற்றத்துக்கு வழிவகுக்கும். அதுதான் அன்பு வழி, அறவழி' என்றார் கனிமொழி.
பொதுக் கூட்டத்துக்கு, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமை வகித்தார். திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலர் சுப. வீரபாண்டியன், திராவிடர் கழகப் பிரசாரச் செயலர் வழக்குரைஞர் அருள்மொழி உள்ளிட்டோர் பேசினர். திராவிடர் கழகப் பொருளாளர் கோ. சாமிதுரை வரவேற்றார். மாவட்டத் தலைவர் மு. சேகர் நன்றி கூறினார்.
முன்னதாக, மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி சிந்தாமணி அண்ணா சிலை அருகேயிருந்து தொடங்கியது. திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலர் இரா. குணசேகரன் பேரணியைத் தொடங்கி வைத்தார்.