தருமபுரி

தருமபுரி நகராட்சியின் மின்சார சங்குக்கு வயது 62

தருமபுரி, ஜன.11: தருமபுரி நகராட்சிக்குச் சொந்தமான மின்சார சங்கு 62 ஆண்டுகளைக் கடந்து தனது சேவையைத் தொடர்ந்து வருகிறது. நேரத்தை அறிந்து கொள்வது ஆதிகாலம் முதலே மனிதனுக்கு ஒரு தேவையாக இருந்துள்ளது. தொழில

ஆா்.ராதாகிருஷ்ணணன்

தருமபுரி, ஜன.11: தருமபுரி நகராட்சிக்குச் சொந்தமான மின்சார சங்கு 62 ஆண்டுகளைக் கடந்து தனது சேவையைத் தொடர்ந்து வருகிறது.

நேரத்தை அறிந்து கொள்வது ஆதிகாலம் முதலே மனிதனுக்கு ஒரு தேவையாக இருந்துள்ளது. தொழில் வளம் பெருகத் தொடங்கிய காலகட்டத்தில், தொழிற்சாலைகள் தங்களது தொழிலாளர்களுக்கு வேலை நேரம் தொடங்குவதை உணர்த்த சங்கு ஊதும் வழக்கத்தைத் தொடக்கி வைத்தன. உணவு இடைவேளை, பணி முடியும் நேரம் ஆகியவையும் சங்கொலியால் அறியப்பட்டன.

இதுபோல் தருமபுரியில் மக்களுக்கு நேரத்தை அறிவிக்கும் வகையில் நகராட்சி சார்பிலேயே கடந்த 62 ஆண்டு காலமாக  சங்கொலி எழுப்பப்படுகிறது.

கடந்த 1950-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தச் சங்கு ஒலிக்கத் தொடங்கியது.

ஒன்றுபட்ட சேலம் மாவட்ட ஜில்லா போர்டு தலைவர் கே.எஸ். சுப்ரமணிய கவுண்டர் தலைமையில் அப்போதைய தருமபுரி பஞ்சாயத்துத் தலைவராக இருந்த பி. அப்பாவுபிள்ளை இந்த மின்சார சங்கின் பணியைத் தொடக்கி வைத்தார். அன்றைய காலத்தில் தருமபுரியைச் சுற்றி சுமார் 10 கி.மீ. தொலைவு வரை உள்ள மக்களுக்கு நேரத்தை அறிவிக்கும் வகையில் இந்த சங்கு அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

"காலம் கண் போன்றது' "கடமை பொன் போன்றது' என்ற வரிகளுக்கு ஏற்ப காலத்தையும், கடமையையும் அனைவருக்கும் உணர்த்தும் வகையில் வாரத்தின் ஏழு நாள்களிலும் காலை 5, 9, மதியம் 1 மற்றும் இரவு 8 மணி என நாளொன்றுக்கு 4 முறை சுமார் 1 நிமிடம் இச்சங்கு ஒலிக்கிறது. மேலும், மறைந்த தேசியத் தலைவர்களின் நினைவாக செவ்வாய்க்கிழமைகளில் காலை 11.30 மணிக்கும், வியாழக்கிழமைகளில் மாலை 3.15 மணிக்கும், வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்கும் கூடுதலாக ஒருமுறை இந்த சங்கு ஒலிக்கும். தலைவர்களின் மகத்தான பணியை மக்களுக்கு நினைவுபடுத்தும் வகையிலேயே இந்த சிறப்பு ஒலிப்பு என்கின்றனர்.

ரம்ஜான் மாதத்தில் நோன்பு மேற்கொள்வோரை தொழுகைக்குத் தயார்படுத்தவும், மார்கழி மாதத்தில் கோயிலுக்குச் செல்வோரைத் துயிலெழுப்பவும் அதிகாலை 4 மணிக்கு ஒரு முறை கூடுதலாக இச்சங்கு ஒலிக்கிறது.

இந்த நோக்கங்களை இன்றைய தருமபுரி நகரவாசிகள் உணர்ந்திருக்கிறார்களோ இல்லையோ, சங்கு இடைவிடாமல் தனது கடமையைச் செய்து வருகிறது.

அறிவியலின் அபரிமிதமான வளர்ச்சியால் இன்று நேரத்தை அறிந்து கொள்வது கடினமாக இல்லை.

"பாக்கெட்' கடிகாரங்கள், விதவிதமான கைக்கடிகாரங்கள், அலைபேசிகள் என எப்போது வேண்டுமானாலும் ஒருவர் நேரத்தை அறிந்து கொள்ள வசதியாக பல கருவிகள் புழக்கத்தில் உள்ளன.

மேலும், அலைபேசி அலாரங்கள் பிடித்த பாடல்களையோ, இசையையோ எழுப்பி, செய்யவேண்டிய செயல்களைத் தவறாமல் "உரிமையாளருக்கு' நினைவுபடுத்துகின்றன.

ஒருவிதத்தில் இந்த சங்கொலி இன்றைய காலகட்டத்தில் அவசியம் இல்லைதான். ஆனால் அதே நேரத்தில் பணியில் மூழ்கிக் கிடக்கும் அக்கம்பக்கத்தினருக்கு சங்கொலி இன்றும் நேரத்தை நினைவுபடுத்துவது உண்மை. எது எப்படியோ, பழைமையை மறக்காமல், இந்த வழக்கத்தை நகராட்சி இன்றும் தொடருவது பாராட்டுதலுக்குரியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT