கிருஷ்ணகிரி, ஜன. 12: பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாக்கும் பணியில் மக்களை ஈடுபடுத்த அரசு சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டும் என்கின்றனர் தமிழ் மரபு என்ற அறக்கட்டளையின் நிர்வாகிகள் கண்ணன் மற்றும் சுபாஷினி.
தமிழர்களின் வரலாறு, மரபுகள், கலைகள், இலக்கியச் செல்வங்கள் மற்றும் வாழ்க்கைமுறையை அழியாமல் பாதுக்கும் வகையில் ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் இந்த அறக்கட்டளை ஜெர்மனியிலிருந்து செயல்படுகிறது. இணையம் மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்த அறக்கட்டளையின் நிறுவனர் கண்ணன் மற்றும் சுபாஷினி ஆகியோர் அண்மையில் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தனர்.
பெண்ணேஸ்வர மடம், ஐகுந்தம், ஜெகதேவி, பி.கே.பேத்தனப்பள்ளி, வரட்டணப்பள்ளி, மல்லசந்திரம், ஊத்தங்கரை பகுதிகளில் காணப்படும் பாறை ஓவியங்கள், கல் திட்டைகள் மற்றும் நடுகற்களையும், தருமபுரி மல்லிகார்ஜூனேஸ்வர் கோயில், அதியமான்கோட்டையில் உள்ள தொன்மையான ஓவியங்களையும் அவர்கள் பதிவு செய்தனர்.
இது குறித்து தினமணி செய்தியாளரிடம் அவர்கள் கூறியது: அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் தங்களின் வரலாற்றுத் தொன்மையையும், சிறப்புகளையும் அறியாமல் உள்ளனர். அவர்களுக்கு இதை எடுத்துச் சொல்ல தமிழ்நாட்டில் உள்ள சிற்றூர்களில் உள்ள அறியப்படாத பாரம்பரியச் சின்னங்களை ஆவணப்படுத்துவது அவசியம். இந்த பாரம்பரியச் சிறப்புகளை அயல்நாட்டினருக்குக் கொண்டுசேர்ப்பதை தமிழ் மரபு அறக்கட்டளை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காணப்படும் சில வரலாற்றுச் சின்னங்கள், தென்கொரியா, இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் உள்ள சில பழங்கால நினைவுச் சின்னங்களை ஒத்திருக்கின்றன. இவற்றைப் பாதுகாக்க அப்பகுதி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது தமிழர்களின் கடமையாகும்.
அரசு இந்த வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும். இதன் மூலம் சுற்றுலாவை மேம்படுத்த இயலும். இதனால் அப்பகுதி மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு வகை செய்ய இயலும்.
இரண்டாம் உலகப்போரின் போது பல நாடுகளின் பாரம்பரியச் சின்னங்கள் அழிக்கப்பட்டன. அந்த நாடுகள் இன்று வருத்தத்தில் உள்ளன. உலகிலேயே அதிகமான வரலாற்றுச் சின்னங்களைக் கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதை சாதகமாகக் கொண்டு உள்ளூர் மக்கள் வருவாய் ஈட்ட அரசு வகை செய்ய வேண்டும். இதன் மூலம் பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாக்கும் பணியில் மக்களையும் முழு வீச்சில் ஈடுபடுத்த முடியும்.
இது போன்ற நினைவுச் சின்னங்கள், பாரம்பரிய ஓலைச்சுவடிகள், செப்பேடுகள் உள்ளிட்ட தமிழர்களின் வரலாற்றைச் சொல்லும் எதுவாக இருந்தாலும், ற்ஹம்ண்ப்ட்ங்ழ்ண்ற்ஹஞ்ங்.ர்ழ்ஞ் என்ற இணையதளத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.