தருமபுரி

தருமபுரியில் மின் விளக்குகள் அமைக்கும் பணியில் தொய்வு:இருளில் மூழ்கும் சாலைகள்

தருமபுரி நகரில் நெடுஞ்சாலையின் நடுவே மின் விளக்குகள் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், சாலைகள் இருளில் மூழ்கியுள்ளன.

ஆா்.ராதாகிருஷ்ணணன்

தருமபுரி நகரில் நெடுஞ்சாலையின் நடுவே மின் விளக்குகள் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், சாலைகள் இருளில் மூழ்கியுள்ளன.

தருமபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலை குண்டல்பட்டியில் தருமபுரி நகருக்குள் வரும் சாலை பிரிகிறது.

இந்தச் சாலை பழைய தருமபுரியிலிருந்து நகருக்குள் இணைந்து தருமபுரி, அரசு மருத்துவமனை, பாரதிபுரம், இலக்கியம்பட்டி, ஆட்சியர் அலுவலகம், ஒட்டப்பட்டி, அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி வழியாக சேஷம்பட்டி என்ற இடத்தில் மீண்டும் தேசிய நெடுஞ்சாலையில் இணைகிறது.

பல ஆண்டுகளாக சுமார் 7 மீட்டர் சாலையாக இருந்து இந்த நெடுஞ்சாலை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் 15 மீட்டர் சாலையாக அகலப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சாலையில் நடுவே தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், சாலை விரிவாக்கம் பணி நிறைவடைந்த பின்னர், சாலையின் நடுவே மின் விளக்குகள் பொருத்தப்படாமலேயே இருந்தது.

இதனால் பழைய தருமபுரியிலிருந்து சேஷம்பட்டி வரையிலான சுமார் 15 கி.மீ. தொலைவு உள்ள இச் சாலை இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இன்றி இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும், அருகாமையில் உள்ள கிராமங்களிலிருந்து இந்த நெடுஞ்சாலையைக் கடப்பவர்களும் போதிய வெளிச்சமின்றி அவதியுற்றனர்.

இதனால், இச் சாலையின் நடுவே மின் விளக்குகள் பொருத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து பொதுமக்களால் வலியுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மின் விளக்குகள் அமைக்கும் பணி அந்தப் பகுதிக்குள்பட்ட ஊராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்தால் தொடங்கப்பட்டது. இதில், முதல்கட்டமாக இலக்கியம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட எல்லையான மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலிருந்து பாரதிபுரம் நகராட்சி எல்லை வரை உள்ள சாலையின் நடுவே அந்த ஊராட்சி நிர்வாகத்தால் அண்மையில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, நகராட்சி எல்லையில், இப் பணிகள் தொடங்க முடிவெடுக்கப்பட்டு, கடந்த மூன்று மாதங்களுக்கு முன், நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், பாரதிபுரத்திலிருந்து ராமக்காள் ஏரி அருகே சந்தைப்பேட்டை பிரிவுச் சாலை வரையிலும், அதேபோல, அங்கிருந்து திருப்பத்தூர் சாலையில் நகராட்சி எல்லை வரையிலும் மின் விளக்குகள் பொருத்த நகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.50 லட்சமும், தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அண்மையில் தொடக்கவிழா நடத்தப்பட்டு, அதற்கான கம்பங்கள், விளக்குகள் நகராட்சி நிர்வாகத்தால் கொள்முதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில், நெடுஞ்சாலையில் விளக்கு கம்பத்தை பொருத்துவதற்கு சாலையை தோண்டிய பின்னர், அதனை மறுசீரைமக்க வேண்டும். இதற்காக, நெடுஞ்சாலைத் துறைக்கு மறு சீரமைப்புக் கட்டணம் செலுத்த வேண்டும். நெடுஞ்சாலை விதிகள்படி சாலை சீரமைப்புக்கு செலுத்த வேண்டிய கட்டணம், பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 50 சதத்துக்கு மேல் வருவதால், அனுமதி அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், தொடக்க விழாவோடு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இது குறித்து, தருமபுரி நகராட்சி ஆணையர் (பொ) கிருஷ்ணகுமார் கூறியது: தருமபுரி நகராட்சி எல்லைக்குள்பட்ட நெடுஞ்சாலையில் சுமார் 4 கி.மீ தொலைவுக்கு மின்விளக்குகள் பொருத்த, சாலையில் கம்பம் நடுவதற்கான மறுசீரமைப்புக் கட்டண விவரம் கோரி, நகராட்சி நிர்வாகத்தால் வரைபடத்துடன் கோப்பு நெடுஞ்சாலைத் துறைக்கு ஒரு மாதத்துக்கு முன்னேரே அனுப்பப்பட்டது. இக் கட்டணம் கேட்புக் கடிதம் கிடைக்கப்பெற்ற உடன், அதனைச் செலுத்தி பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT