தருமபுரி

நிகழாண்டில் பொய்த்துப் போன பருவமழை! கோடையை சமாளிக்க நீர்ப் பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்படுமா?

தருமபுரியில் நிகழாண்டு பருவமழை பொய்த்துப் போனதால்,  வரும் கோடையில் தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்கிட

ஆா்.ராதாகிருஷ்ணணன்

தருமபுரியில் நிகழாண்டு பருவமழை பொய்த்துப் போனதால்,  வரும் கோடையில் தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்கிட நீர்ப்பாசனத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுப்பெற்றுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில், காவிரி ஆறு கடந்து சென்றாலும்,  அது இம் மாவட்டத்தின் பாசனத்துக்கு இதுவரை பயன்பட்டதில்லை.  மாறாக,  சுமார் 60 ஆண்டுகள் போராட்டத்துக்கு பிறகு,  கடந்த 2013-இல் இருந்து காவிரி நீர் குடிப்பதற்கு மட்டும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் பஞ்சப்பள்ளி சின்னாறு,  தொப்பையாறு, நாகவதி, கேசரிகுளி, வாணியாறு, தும்பலஅள்ளி என 8 அணைகள் மற்றும் 83 பொதுப் பணித் துறை ஏரிகள் உள்ளன. இவை தவிர,  ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் 596 சிறியதும், பெரியதுமான ஏரிகள் உள்ளன. 
இந்த அணைகள் மற்றும் ஏரிகள் மழைக் காலங்களில் சேகரிக்கப்படும் நீரைக் கொண்டுதான்,  மிகச் சில நூறு ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெறுகிறது. இவை தவிர, மாவட்டத்தின் பெரும்பாலான நிலப் பரப்பு மேட்டு நிலமாகும்.  வானம் பார்த்த பூமி என்ற அடிப்படையில் மழையை நம்பி மட்டுமே சிறு தானியங்கள் உள்ளிட்டவை இவ் வகை மேட்டு நிலங்களில் பயிரிடப்படுகின்றன.
இந்த நிலையில், நிகழாண்டு இந்த மாவட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட மழை பொழியாமல் பொய்த்துப் போனதால்,  அணைகள், ஏரிகளில் நீர் இருப்பு இல்லை. நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாகக் குறைந்து நிலக்கடலை,  வாழை உள்ளிட்டவை சாகுபடி செய்யும் தருவாயில் காய்ந்து கருகிப் போயுள்ளன.  இதனால், விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 
நீர்ப் பாசனத் திட்டங்களை நிறை வேற்ற வேண்டும்: தருமபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து பாசனம் மற்றும் குடிநீர்த் தட்டுப்பாடின்றி கிடைக்க,  தென்பெண்ணை ஆற்றில் எண்ணேகொல்புதூரிலிருந்து தும்பலஅள்ளி அணைக்கு கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வரும் திட்டம்,  ஒகேனக்கல் காவிரியில் மழைக் காலங்களில் செல்லும் மிகை நீரை,  மாவட்டத்தில் உள்ள 600 ஏரிகளில் நிரப்பும் திட்டம் ஆகியவற்றை விரைந்து அமலுக்குக் கொண்டுவர வேண்டும்.  மேலும்,  சேனேகால், ஜெகநாதன் கோம்பை அணைக்கட்டு திட்டம், வாணியாறு வள்ளிமதுர கால்வாய் நீட்டிப்பு திட்டம்,  கிருஷ்ணகிரி அணை வலதுபுறக் கால்வாய் மொரப்பூர் வரை நீட்டிக்கும் திட்டம் என ஏற்கெனவே மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டு நிலுவையிலுள்ள நீர்ப்பாசனத் திட்டங்களை விரைந்து நிறைவேற்றினால் மட்டுமே எதிர்வரும் கோடையில் மட்டுமல்ல,  எதிர்காலத்திலும் தருமபுரி மாவட்டத்தில் வறட்சியிலும் தண்ணீர் தட்டுப்பாட்டை முற்றாக அகற்ற முடியும் என்பதே மாவட்ட மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

மழையளவு: தருமபுரி மாவட்டத்தில் பெய்த மழையளவு மாநிலத்தின் சராசரிக்கும் கீழே உள்ளது.  மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 813 மி.மீ. ஆகும். இதில், கடந்த 2013-இல் 804 மி.மீ., 2014-இல் 778.4 மி.மீ., 2015-இல் சராசரிக்கும் அதிகமாக 1,101 மி.மீ., 2016-இல் 446.8, 2017-இல் 894.7 பதிவானது.  ஆனால்,  நிகழாண்டு தற்போது வரை 249.6 மி.மீ. மட்டுமே பதிவாகியுள்ளது.  இது ஆண்டு சராசரியைக் காட்டிலும் மிக, மிக குறைவாகும்.
இதனால், கோடை தொடங்குவதற்கு முன்பே குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு,  தருமபுரியில் ஒட்டப்பட்டி, நேரு நகர், காரிமங்கலம், பாலக்கோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போதிய குடிநீர் வழங்கப்படவில்லை என அவ்வப்போது பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.  கோடை காலத்தில் இந்த தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில்
எழுந்துள்ளது.

அணைகளின் நீர் நிலவரம்
ஈச்சம்பாடி அணை மொத்த கொள்ளளவு 17.35 அடி.  இந்த அணையில் மட்டும் தற்போது 100 சதவீதம் தண்ணீர் உள்ளது.  பஞ்சப்பள்ளி சின்னாறு அணை மொத்தக் கொள்ளளவு 50 அடியில் தற்போது சொட்டு நீரின்றி வறண்டு காணப்படுகிறது.  கேசரிகுளே அணை மொத்தக் கொள்ளவு 25.20 அடியில் தற்போது 10.82 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. வாணியாறு அணை மொத்தக் கொள்ளளவு 65.27 அடியில் தற்போதைய நிலவரப்படி 24.60 அடி நீர் இருப்பு உள்ளது.  அதேபோல,  நாகவதி அணை மொத்தக் கொள்ளளவு 34.45 அடியில் தற்போது 8.85 அடி நீர் உள்ளது.  வறட்டாறு அணை மொத்தக் கொள்ளளவு 34.45 அடியில் 11.48 அடி நீர் உள்ளது.  தும்பலஅள்ளி அணை மொத்தக் கொள்ளவு 14.76 அடியில் துளியளவு நீரின்றி வறண்டு போயுள்ளது.  தொப்பையாறு அணை மொத்தக் கொள்ளளவு 50.18 அடியில் தற்போது 17.21 அடி மட்டும் நீர் இருப்பு உள்ளது.  கோடைக்கு முன்பே, எதிர்பாராத வகையில் மழை பொழிந்தால் மட்டுமே அணைகளில் நீர் நிரம்பி,  அணையின் பாசனப் பகுதிகளில் சாகுபடி செய்ய இயலும் என்பதே இப்போதைய நிலையாகும்.
மழையின்மை காரணத்தால் பெரும்பாலும் மாவட்டத்தின் பரவலாக 1,000 அடிக்கும் சில பகுதிகளில் 1,200 அடிக்கும் கீழே நிலத்தடி நீர்மட்டம் சென்றதால், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

மிஸ் பண்ணிடாதீங்க... ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

SCROLL FOR NEXT