தருமபுரி

ஒகேனக்கல் காவிரி கரையில் ஓய்வெடுக்கும் முதலைகள்!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளதால்,  முதலைகள் கரைக்கு வருகின்றன.

ஆா்.ராதாகிருஷ்ணணன்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளதால்,  முதலைகள் கரைக்கு வருகின்றன.
கர்நாடக மாநிலத்திலிருந்து வரும் காவிரி ஆறு,  தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான பிலிகுண்டுலுவில் நுழைகிறது.  அங்கிருந்து தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே ஊட்டமலை வழியாக ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியை வந்தடைகிறது.  ஒகேனக்கல்லில் ஊட்டமலை அருகே ஆலம்பாடி பகுதியில்,  நாட்ரம்பாளையம் செல்லும் சாலையோரம் நீண்ட தொலைவு தமிழகம் மற்றும் கர்நாடக எல்லையைத் தொட்டுச் செல்கிறது. இந்த ஆலம்பாடி ஆற்றுப் பகுதியில் நான்கு அல்லது ஐந்து சுழல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும்,  ஆலம்பாடி, அஜ்ஜிப்பாறை உள்ளிட்ட ஆற்றின் ஆழமான பகுதிகளில் நூற்றுக்கணக்கான முதலைகள் உள்ளன.
வறண்டு போகும் காவிரி ஆறு... ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த பல ஆண்டுகளாக மழைக் காலத்தில் அதிகளவு நீரும், ஏனைய நாள்களில் தண்ணீர் வரத்து நொடிக்கு சுமார் 2 ஆயிரம் கன அடி முதல் 5 ஆயிரம் கன அடி வரையும் வந்துகொண்டிருந்தது.  ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, கர்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க மறுப்பதால், கோடைகாலத்தில் தண்ணீர் வரத்து வெகுவாக சரிந்து நொடிக்கு 1,000 கன அடிக்கும் குறைவாக வருகிறது.  இதன் காரணமாக, ஒகேனக்கல் காவிரி ஆறு கோடைக்கு முன்பே வறண்டு பாறைகளாக தற்போது காட்சியளிக்கிறது.
கரைக்கு வரும் முதலைகள்: நீர்வரத்து குறைந்துள்ளதால்,  ஆலம்பாடி பகுதியில் கடந்த சில தினங்களாக முதலைகள் கரைக்கு வருகின்றன.  காலை சுமார் 9 மணி முதலே ஆற்றை விட்டு வெளியேறி மணல் மீதும்,  பாறைகள் மீதும் அசைவின்றி முதலைகள் காணப்படுகின்றன.  சுற்றுலாப் பயணிகள் நடமாடும் சத்தத்தை கேட்ட உடனே தண்ணீருக்குள் மீண்டும் சென்று விடுகின்றன.  இந்த முதலைகள் அசைவின்றி கரையில் படுத்திருப்பதால்,  அப்பகுதிக்கு புதிதாக வருவோர் ஆபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
ஆபத்தை அறியாமல்...நீர்வீழ்ச்சியில் குளிக்க விருப்பமில்லாத நூற்றுக்கணக்கானோர் ஆலம்பாடி ஆற்றில் இறங்கி குளிக்கின்றனர்.  வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவோர் ஆற்றின் அனைத்துப் பகுதிகளையும் அறிந்திருப்பதில்லை.  மேலும், மறுகரையில் உள்ள மாறுகொட்டாய் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்வோரும் இந்த முதலைகள் இருக்கும் பகுதியை பரிசலில் கடந்து செல்கின்றனர்.
முன்னெச்செரிக்கை நடவடிக்கை:  முதலைகள் அதிகமுள்ள ஆற்றுப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.  ஆலம்பாடி பகுதியில் புறக்காவல் நிலையம் அமைத்து,  காவலர்கள்,  ஊர்க்காவல் படையினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.  மேலும்,  கரைக்கு வரும் முதலைகளைப் பிடித்து ஒகேனக்கல்லில் உள்ள முதலைகள் மறுவாழ்வு மையத்தில் விடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஒகேனக்கல்லைச் சேர்ந்த தொழிலாளி ஜெய்சங்கர் கூறியது:  ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஆலம்பாடி உள்ளிட்ட ஆழமான பகுதிகளில் நூற்றுக்கணக்கான முதலைகள் உள்ளன.  ஆனால், இவை கடந்த 60 ஆண்டுகளாக ஆற்றைவிட்டு கரைக்கு வந்ததில்லை.  தற்போது, கணிசமாக தண்ணீர் குறைந்துள்ளதால்,  முதலைகள் நீரிலிருந்து வெளியேறி கரைக்கு வந்து மீண்டும் நீருக்குள் செல்கின்றன.  இத்தகைய சூழலில்,  சுற்றுலாப் பயணிகள் முதலைகள் இருக்கும் பகுதிகளில் குளிப்பது ஆபத்தான செயலாகும்.  எனவே, அங்கு குளிப்பதற்கு தடை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
துன்புறுத்தினால் திருப்பித் தாக்கும்... உப்பு நீரில் உள்ள முதலைகள் உள்பட மொத்தம் மூன்று வகை முதலைகள் உள்ளன.  ஒகேனக்கல் ஆற்றில் உள்ள முதலைகள் மக்கர் என்கிற வகையைச் சார்ந்தவை.  இந்த வகை முதலைகளால் ஒகேனக்கல்லில் எப்போதும் மனித உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதில்லை.  அவை தண்ணீருக்குள் கிடைப்பதை உண்டு வாழும் தன்மை கொண்டவை.  மனிதர்களைக் கண்டு அச்சப்படும்.  அதே வேளையில், அவற்றை துன்புறுத்தினால், அவை திருப்பித் தாக்கும். அவற்றைக் கணக்கெடுப்பதோ அல்லது  அவற்றை மீட்டு முதலைகள் மறுவாழ்வு மையத்துக்கு கொண்டுவருவதோ சாத்தியமில்லை.  பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அவற்றை துன்புறுத்தாமலும், முடிந்த வரை அவை வாழும் பகுதிக்குச் செல்லாமல் தவிர்ப்பதும் சிறந்தது என வனத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

மிஸ் பண்ணிடாதீங்க... ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

SCROLL FOR NEXT