தருமபுரி

விளைநிலங்களில் எரிபொருள் சேமிப்புக் கிடங்கு அமைக்க எதிர்ப்பு

ஆா்.ராதாகிருஷ்ணணன்

தருமபுரி அருகே விளைநிலங்களில் எரிபொருள் சேமிப்புக் கிடங்கு அமைக்கும் திட்டத்துக்கு விவசாயிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை அடுத்த சிவாடி கிராமத்தில் சுமார் 150 முதல் 200 ஏக்கர் வரை இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில், எரிபொருள் சேமிப்புக் கிடங்கு அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எரிபொருள் குழாய் பாதை விரிவாக்கம்: இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் (எச்.பி.சி.எல்.) சார்பில் ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் ஏற்கெனவே எரிபொருள் கொண்டு செல்லும் குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆந்திரம், தெலுங்கானா, தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் எரிபொருள் தேவையை நிவர்த்தி செய்வதற்காக தமிழகத்தில் தருமபுரி மாவட்டத்தில் ஓர் இடத்தைத் தேர்வு செய்து, அங்கு எரிபொருள்களைக் குழாய் வழியாக கொண்டு வந்து இரண்டு அலகுகளாக சேமிப்புக் கிடங்கு அமைக்க 
கடந்த 2017 அக்டோபர் மாதம் எச்.பி.சி.எல். நிறுவனம் சார்பில் திட்டம் தயாரிக்கப்பட்டது.
இதற்கு, விஜயவாடா கொண்டப்பள்ளி முதல் தருமபுரி மாவட்டம், சிவாடி வரை 697 கி.மீட்டருக்கு "எரிபொருள் குழாய் பாதையை விரிவாக்கம் செய்யும் திட்டம்' எனப்படுகிறது. இதற்காக, விஜயவாடாவிலிருந்து ஆந்திரத்தின் பல்வேறு நகரங்களில் வழியாக குழாய்கள் பதிக்கப்பட்டு நிறைவாக தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள குப்பம் நகரிலிருந்து தருமபுரி மாவட்டம், சிவாடி வரை குழாய்கள் கொண்டு வருவதற்கான பாதைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இரு அலகுகள்:
தருமபுரி மாவட்டம், சிவாடி ரயில் நிலையம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண் 7-க்கிடையே, தேர்வு செய்யப்படும் இடத்தில், அலகு 1-இல் 4.24 மில்லியன் மெட்ரிக் டன் எரிபொருள் மற்றும் இலகு 2-இல் 5.85 மில்லியன் மெட்ரிக் டன் என்ற அளவுக்கு ஓராண்டுக்கு, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் இருப்பு வைக்கப்படும். இங்கிருந்து கர்நாடக, தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களுக்கும்  அனுப்பப்படும்.
இடம் தேர்வுக்கு காரணம்: ரயில் நிலையம் மற்றும் இருப்புப் பாதையோடு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியும், சேலம் விமான நிலையத்திற்கு மிக அருகிலும் சிவாடி கிராமம் இருப்பதே காரணாமாகக் கூறப்படுகிறது. 
அதேபோல, எரிபொருள் சேமிப்புக் கிடங்கு அமைக்க, துணை ஆட்சியர் நிலையான அதிகாரி ஒருவர் பணி நியமனம் செய்யப்பட்டு, ஆட்சியர் அலுவலகம் அருகே ஒட்டப்பட்டியில் இதற்கான அலுவலகமும் அந்த நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
கிராம மக்கள் அச்சம்: பெட்ரோல் சேமிப்புக் கிடங்கு அமைய உள்ளதாகக் கூறப்படும் இடத்திற்கு அருகில், சிவாடி, கெங்கலாபுரம், பூதனஅள்ளி என சுற்று வட்டாரத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன.
இங்கு பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் சேமிப்புக் கிடங்கு அமைப்பதால், அசம்பாவித நிகழ்வுகள் ஏற்பட்டால், பாதிப்புக்கள் கடுமையாகும். அதேபோல, இந்தப் பகுதியில் வசிப்போருக்கும் உடல் உபாதைகள் உள்ளிட்டவை ஏற்படக் கூடும் என அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர்.
ஆலோசனைக் கூட்டம்: எரிபொருள் சேமிப்புக் கிடங்குக்கு நிலம் கையகப்படுத்துவதற்கான, முதல் கட்டப் பணிகள் அந்த நிறுவனம் சார்பில்  தொடங்கப்பட்டுள்ளன.
இதற்காக, அண்மையில் நல்லம்பள்ளியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், எச்பிசிஎல் நிறுவன நிர்வாகிகள், சிவாடி கிராம விவசாயிகள் சிலரை அழைத்து, நிலம் எதற்காக எடுக்கப்படுகிறது என்பது உள்ளிட்ட காரணங்கள் ஏதும் தெரிவிக்காமல், நிலம் எங்களுக்கு அளித்தால், எதிர்ப்பார்க்கும் தொகையுடன் வேலைவாய்ப்பு தருவதாக உறுதியளித்துள்ளனர்.
மேலும், அதற்கான ஒப்புதல் படிவத்தில் விவசாயிகள் சிலரிடம் கையெழுத்து பெற்றதாகக் கூறப்படுகிறது.
விவசாயிகள் எதிர்ப்பு: சிவாடி கிராமத்தில் 800 குடும்பங்களில் சுமார் 5000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்தக் கிராம மக்கள் எரிபொருள் கிடங்குக்கு எங்களது நிலத்தை வழங்கமாட்டோம். விளைநிலத்தில் இந்தத் திட்டம் வருவதை போராடி தடுப்போம் என்கின்றனர்.
இதுகுறித்து, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் அர்ஜூனன் கூறியது: சிவாடி கிராமத்தில் தலித் மக்கள் வசித்து வருகிறோம். சுமார் 150 முதல் 200 ஏக்கர் வரையிலான நிலம் இங்குள்ளது. இந்த நிலத்தில், கேழ்வரகு, சோளம், பருத்தி, நிலக்கடலை ஆகியவையும் அதேபோல சில இடங்களில் மஞ்சள், கரும்பு, நெல் ஆகியப் பயிர்களும் பயிரிட்டு வருகிறோம். 
இந்த நிலையில், ரயில் நிலையம் மற்றும் ரயில் பாதையொட்டியுள்ள எங்களது ஊரில் பெட்ரோல் சேமிப்புக் கிடங்கு அமைக்க உள்ளதாகவும், அதற்கான முயற்சியில் தனியார் நிறுவன அதிகாரிகள், வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். எங்களது வாழ்வாதாரமாக உள்ள இந்த நிலத்தை இழந்து நாங்கள் பிழைப்புத் தேடித்திரியும் நிலைக்கு செல்லமாட்டோம். பெரும் ஆபத்து மிகுந்த எரிபொருள் கிடங்கை இங்குள்ள நிலத்தை அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். மீறி, நிலம் எடுக்க முயற்சித்தால் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார். 
இதேபோல, விவசாயி சுந்தரம்மாள் மற்றும் முருகன் ஆகியோர் கூறியது: இருக்கின்ற நிலத்தையும் பல்வேறு திட்டங்களில் பெயரால் எடுத்துக்கொண்டால் எங்களது நிலைமை மிகவும் பரிதாப நிலைக்குச் சென்றுவிடும். எனவே, எங்களது நிலங்களை எந்தத் திட்டத்துக்கும் வழங்கமாட்டோம் என்றனர்.
தருமபுரி மாவட்டத்தில், ஏற்கெனவே, உயர் அழுத்த மின் பாதை திட்டங்கள், கெயில் திட்டம் எனத் தொடர்ந்து விளைநிலங்கள் கையகப்படுத்திவரும் நிலையில், தற்போது மீண்டும் எரிபொருள் சேமிப்புக் கிடங்கு அமைப்பதற்காக விளைநிலங்களை கையகப்படுத்தவது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயலாகும். எனவே, இத்தகையத் திட்டங்களுக்கு விளைநிலங்களை கையகப்படுத்துவதை கைவிட்டு மாற்று வழிகளில் செயல்படுத்த முயற்சிக்கலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT