தருமபுரி

பழங்குடியினச் சான்றிதழ் கோரும் குருமன்ஸ் சமூகத்தினர்!

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பாலக்கோடு, காரிமங்கலம் ஆகிய இரு வட்டங்களைச் சேர்ந்த குருமன்ஸ் சமூகத்தினர் சுமார் 20 ஆயிரம்

சா. ஜெயப்பிரகாஷ்

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பாலக்கோடு, காரிமங்கலம் ஆகிய இரு வட்டங்களைச் சேர்ந்த குருமன்ஸ் சமூகத்தினர் சுமார் 20 ஆயிரம் பேர் தங்களுக்கு பழங்குடியினர் என்ற சான்றிதழ் வழங்குவதற்காக கடந்த 15 ஆண்டு
களாகத் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மலையடிவாரங்களில் வாழ்ந்து கொண்டு ஆடு மேய்ப்பதும்,   கம்பளி நெசவு செய்வதும்,  வீரபத்திர சுவாமி வழிபாடும்,   வழிபாட்டின்போது தலையில் தேங்காய் உடைத்தலும், சமுதாயப் பெரியவர்கள் முன்னிலையில் இரவில் திருமணம் செய்வதும்,   பொணாய் என்ற கூழ் குடிக்கும் உபகரணம் பயன்படுத்துவது போன்றவை குருமன்ஸ் என்ற சமூகத்தினருக்கான அடிப்படை கலாசாரமாகக் கருதப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் திருவண்ணாமலை,  தருமபுரி,  கிருஷ்ணகிரி,  சேலம், வேலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் குருமன்ஸ் சமூகத்தினர் வாழ்ந்து வந்தாலும்,   தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர்.
தருமபுரி  மாவட்டத்தில் மட்டும் ஏறத்தாழ 50 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.   இவர்களில் அரூர்,  பாப்பிரெட்டிப்பட்டி,  தருமபுரி,  நல்லம்பள்ளி,  பென்னாகரம் ஆகிய 5 வட்டங்களில் வசிப்பவர்கள் பழங்குடியினச் சான்றிதழ் பெறுவதில் எந்தச் சிக்கலும் இல்லை.
ஆனால்,   பாலக்கோடு,  காரிமங்கலம் ஆகிய இரு  வட்டங்களில் மட்டும் கடந்த 15 ஆண்டுகளாக பழங்குடியினச் சான்றிதழ் பெற முடியவில்லை என்கிறார் தமிழ்நாடு  குருமன்ஸ் பழங்குடிகள் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர்- வழக்குரைஞர் எம். ரவி.
மலைகளில் வசிப்போர் குரும்பர்கள் என்றும்,   மற்ற தரைப் பகுதிகளில் வசிப்போர் குருமன்ஸ் என்றும் வருவாய் நிர்வாகத் துறையின் சுற்றறிக்கையில் (1995) தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தும்,  அதற்கு முன்பாக சமூக நலத் துறையின் அரசாணையில் 18-ஆவது பட்டியலில் குருமன்ஸ் வரிசைப்படுத்தி, அதற்கு முறையாக குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டும், இந்தப் புறக்கணிப்பு தொடருவதாக ரவி குறிப்பிடுகிறார்.
படிப்பறிவில்லாத முன்னோர் பலரும் சாதிச் சான்றிதழ் இல்லாமல் இருப்பதுடன்,   சான்றிதழ் வைத்திருக்கும் சிலரும் எம்.பி.சி. என்ற பட்டியலில் பெற்றிருப்பதும் இப் பிரச்னைக்குக் காரணமாகத் தெரிகிறது.
இந்தப் பிரச்னை தொடர்பாக தருமபுரி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
விவரமும்,   வசதியும் உள்ள சிலர் மட்டும் நீதிமன்றத்தை நாடி உரிய உத்தரவுகளைப் பெற்றுவந்து சான்றிதழ்களைப் பெற்று விடுகின்றனர்.   ஆனால் ஏழை, எளியோர் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது என்கிறார் வழக்குரைஞர் ரவி.
அண்மையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழியை நேரில் சந்தித்த சங்க நிர்வாகிகள்,   கடந்த கால அனுபவங்களை விளக்கிக் கூறியிருக்கிறார்கள்.  
ஆட்சியரும் உதகையிலுள்ள பழங்குடி ஆய்வு மையத்துக்கு அனுப்பி அறிக்கை பெற்று சிறப்பு முகாம்கள் நடத்தி,  சான்றிதழ்களை வழங்குவதாக உறுதியளித்திருக்கிறார்.
மாநில அரசின் இட ஒதுக்கீட்டில் ஒரு சதவிகிதம் பழங்குடியினருக்கு வழங்கப்பட்டிருப்பதால்,   இச் சமூகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பெரிதும் பயனடைவார்கள். 
எனவே,  சுமார் இரண்டாயிரம் மாணவ,  மாணவிகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு,  அவர்களின் சமூக,  கலாசார விழுமியங்களை வைத்து சான்றிதழ் வழங்க மாநில அரசு உத்தரவிட வேண்டும்.
இதற்காக மாநில அரசு, தெளிவான விளக்கங்களை சான்றிதழ் வழங்கும் அனைத்து வருவாய்த் துறை அலுவலர்களுக்கும் மீண்டும் ஒருமுறை சுற்றறிக்கையாக அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT