முகப்பு
தருமபுரி

அரூர்-சேலம் சாலையை சீரமைக்க வேண்டும்: ஈ.ஆர்.ஈஸ்வரன்

அரூர்-சேலம் நெடுஞ்சாலையை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள்

Updated On : 8 அக்டோபர் 2018, 8:38 am IST
பகிர்:

அரூர்-சேலம் நெடுஞ்சாலையை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.
அரூரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரூர் ஆர்.முத்துக்கவுண்டரின் நூற்றாண்டு விழாவில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசியது : 
அரூரிலிருந்து சேலம் செல்லும் நெடுஞ்சாலையானது 60 கிலோ மீட்டர் தொலைவு கொண்டதாகும். இந்த சாலையானது முறையாக பராமரிப்பு செய்யப்படாததால் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற வகையில் உள்ளது. ஒன்றரை மணி நேரத்தில் அரூரிலிருந்து சேலம் செல்ல வேண்டிய வாகனங்கள் மூன்று மணி நேரம் பயணிக்கிறது. எனவே, மாநில அரசு போர்க்கால அடிப்படையில் அரூர்-சேலம் நெடுஞ்சாலையை சீரமைப்பு செய்ய வேண்டும். இல்லையெனில், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும். டீசல், பெட்ரோல், உரம், யூரியா விலை உயர்வு, போதிய பருவமழை இல்லாமை, விவசாய விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்காமல் இருப்பதால் விவசாயத் தொழில் மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ளது. இதனால், விவசாயிகள் வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலையுள்ளது. எனவே, விவசாயிகள் விவசாயத்தை மட்டுமே நம்பி இல்லாமல், விவசாயம் சார்ந்த பிற தொழில்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
முன்னதாக, அரூர் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.  இதில், கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலர் ஜி.அசோகன், கிழக்கு மாவட்டச் செயலர் கே.செந்தில்முருகன், ஒன்றியச் செயலர்கள் எம்.சிவன், ஆர்.பழனிசாமி, பி.செந்தில், சரவணன், நகரச் செயலர் பி.பெருமாள், மாவட்ட துணைச் செயலர் கே.பி.இளங்கோ, விவசாய அணி மாவட்ட செயலர் பி.எம்.இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.