மெல்லக் கடந்து வரும் தருமபுரி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத் திட்டம்
தருமபுரி நகரின் நடுவே- சுற்றிலும் நாற்புறமும் வணிக நிறுவனங்களையும் குடியிருப்புகளையும் கொண்டு போக்குவரத்து நெருக்கடியால் சிக்கித் தவிக்கும்
தருமபுரி நகரின் நடுவே- சுற்றிலும் நாற்புறமும் வணிக நிறுவனங்களையும் குடியிருப்புகளையும் கொண்டு போக்குவரத்து நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் பேருந்து நிலையங்களை புறநகரில் மாற்றுவதற்கான திட்டம் 2015-ஆம் ஆண்டிலேயே நகர்மன்றத் தீர்மானமாக உருவெடுத்தபோதும், நிகழாண்டில்தான் (2018) அதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஏறத்தாழ 75 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட தருமபுரி நகராட்சியில், 1980-இல் 3.9 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட புறநகர் பேருந்து நிலையமும், 1996-இல் 1.78 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட நகரப் பேருந்து நிலையமும் செயல்பட்டு வருகின்றன. இவை இரண்டிலும் நாளொன்றுக்கு 532 பேருந்துகள் வந்து செல்கின்றன.
பேருந்து நிலையத்துக்கான இடம் தேடல்: நகரப் பகுதியில் பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் காணப்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, புறநகர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. பென்னாகரம் சாலை, நல்லம்பள்ளி சாலை என பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையுடன் எளிதில் இணையும் வகையில் இடங்கள் தேடப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக, கடந்த 2015 ஏப்ரல் 17-ஆம் தேதி நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் புறநகரில் பேருந்து நிலையம் அமைக்கப்பதற்கான தனியார் நிலத்தைத் தானமாக வழங்க விரும்புவோரை தேடும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான விளம்பரம் நாளிதழ்களில் வெளியிடப்பட்டது.
இடம் தேர்வு: தொடர்ச்சியாக, பென்னாகரம் சாலையில் சோகத்தூர் ஊராட்சிக்குள்பட்ட அமானி ஜெட்டிஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த 9.05 ஏக்கர் நிலத்தை நகராட்சி நிர்வாகத்துக்கு தானமாக வழங்குவதாக தொழிலதிபர் டி.என்.சி. மணிவண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர்.
பென்னாகரம் சாலையும், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையும் இணையும் முனையில்- மேம்பாலத்துக்கு அருகே- தானமாக பெறப்படும் இந்த இடம் அமைந்துள்ளது.
பேருந்து நிலையம் அமைக்க அரசாணை: இந்த நிலையில், கடந்த 2017 அக். 7-ஆம் தேதி தருமபுரியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ரூ. 39.14 கோடியில் பொதுமக்கள் பங்களிப்புடன் திட்டத்தை வடிவமைத்து, நிதியைத் திரட்டி பேருந்து நிலையத்தைக் கட்டி, பராமரித்து ஒப்படைக்கும்' முறையில் (ஈஆஊஞப) புதிய பேருந்து நிலையத்தை அமைக்க அரசாணை கடந்த ஜூலை 24-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தானமாகப் பெறப்படும் இடத்தை நகராட்சியின் பெயரில் பத்திரப் பதிவு செய்வதற்கான அனுமதியளிக்கும் அரசாணையும் கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
திட்ட தயாரிப்பு: கடந்த செப். 3-ஆம் தேதி இப்பேருந்து நிலையம் அமைப்பதற்கான ஆவணங்கள்' தயாரிக்கும் பணிக்காக ரூ.4.60 லட்சத்தில் தனியார் நிறுவனம் ஒன்றை கலந்தாலோசகராக (கன்சல்டன்ட்) நகராட்சி ஆணையர் நியமித்துள்ளார்.
30 நாள்களுக்குள் இப்பணியை முடிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. ஆவணங்கள் பெறப்பட்டவுடன் அவைகளும் அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்படும்.
இவற்றுக்கிடையேதான், தருமபுரி மாவட்டத்துக்கு இதுவரை வந்து சென்றுள்ள சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு மற்றும் சட்டப்பேரவை மனுக்கள் குழு ஆகியவற்றின் ஆய்வு மற்றும் பொருளிலும் தருமபுரி பேருந்து நிலையம் இடம்பெற்றிருக்கிறது.
உள்ளாட்சித் தேர்தலோ, மக்களவைத் தேர்தலோ நெருங்கி வந்துவிடாத பட்சத்தில், உயர்கல்வித் துறை அமைச்சரும் பிரத்யேக கவனம் செலுத்தி போதுமான அழுத்தம் கொடுக்கும் பட்சத்தில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ஓராண்டில் வரும் என எதிர்பார்க்கலாம்!