தருமபுரி ஆயுதப்படை மைதானத்தில் தொடர் வறட்சியால் ஆழ்துளைக் கிணறுகள் வறண்டு நீராதாரம் முற்றிலும் இல்லாமல் போன நிலையில், போலீஸார் தீவிர முயற்சி செய்து மழை சேகரிப்புக் கட்டமைப்பை ஏற்படுத்தி நீராதாரத்தைப் பெருக்கியுள்ளனர்.
போலீஸாரின் இந்த முயற்சிக்கு சக காவல் துறை அதிகாரிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
தருமபுரி வெண்ணாம்பட்டியில் ஆயுதப்படை மைதானம் உள்ளது. 36 ஏக்கரில் உள்ள இந்த மைதானத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம், திருமண மண்டபம் உள்ளிட்டவை உள்ளன. 300 காவலர் குடியிருப்புகள் உள்ளன.
மேலும், இங்குள்ள தற்காலிக காவலர் பயிற்சிப் பள்ளியில் 200 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்தக் கட்டுமானங்களைத் தவிர்த்து, மைதானத்தில் சுமார் 25 ஏக்கர் இடம் காலியாக உள்ளது. இந்த இடத்தில் வேம்பு, புங்கன், மா, கொய்யா, தேக்கு, தென்னை உள்ளிட்ட பல வகை மரங்கள் வளர்ந்துள்ளன.
இந்த மைதானத்தில் காவலர்கள் பயன்பாட்டுக்கென மொத்தம் 6 ஆழ்துளைக் கிணறுகளும், திறந்தவெளிக் கிணறும் அமைக்கப்பட்டிருந்தன. நாளடைவில், இங்குள்ள கிணறு நீரின்றி வற்றிப்போனது. 6 ஆழ்துளைக் கிணறுகள் நீரின்றி வறண்டுள்ளன.
மைதானத்தில் தொடர் நீர் தட்டுப்பாட்டால் அவதியடைந்து காவலர்கள் குடியிருப்புகளுக்கும், பயிற்சிப் பள்ளிக்கும் என தங்கள் தேவைகளுக்கு நீரை வெளியிடங்களில் இருந்து விலைக்கு வாங்கி வந்து பயன்படுத்தும் நிலை உள்ளது.
தொடர் நீர் தட்டுப்பாட்டைப் போக்கிட, பரந்து விரிந்த மைதானத்தில் பெய்யும் மழைநீரைச் சேமித்து நீராதாரத்தைப் பெருக்கிட காவல் துறை அதிகாரிகள் தீர்மானித்தனர்.
இதுதொடர்பாக தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.ராஜன், மைதானத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, மழைநீரைச் சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த அறிவுறுத்தினார்.
அவரது வழிகாட்டுதலின்பேரில், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் அ. மணிகண்டன் (மதுவிலக்கு), கா. சொக்கையா (ஆயுதப்படை) ஆகியோருடன் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள், பயிற்சி காவலர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், ஆயுதப்படை மைதானத்தில் மழைக் காலங்களில் தண்ணீர் செல்லும் பாதையைக் கண்டறிந்தனர்.
அந்தப் பாதையில் வறண்ட ஆழ்துளைக் கிணறுகள் அமைந்துள்ள மூன்று இடங்களை அடையாளம் கண்டு, அங்கு முதலில் மழைநீர் சேமிப்புக் கட்டமைப்பை உருவாக்கினர்.
பொக்லைன் இயந்திரம் மூலம் அந்த மூன்று இடங்களிலும் சுமார் 5 அடி உயரத்துக்கு குளம் அமைத்தனர். இவ்வாறு அமைக்கப்பட்ட மூன்று குளங்களில் அண்மையில் பெய்த மழையின்போது மூன்று முதல் நான்கு அடி உயரம் வரை மழை நீர் தேங்கியுள்ளது.
தேங்கி நிற்கும் தண்ணீர் அருகில் வறண்டுபோன ஆழ்துளைக் கிணறுகளில் உள்ளே புகுந்து அதன் நீர் மட்டத்தை உயர்த்தியது. வறண்டுபோன கிணற்றிலும் தண்ணீர் ஊற்றெடுத்துள்ளது. இரண்டு நாள்களில் சுமார் 2 லட்சம் லிட்டர் மழை நீர் மீண்டும் நிலத்தடிக்குச் சென்றுள்ளதாகத் தெரிகிறது. இதனால் நீர் ஆதாரத்துக்கு வழி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, காவல் துணைக் கண்காணிப்பாளர் அ. மணிகண்டன் கூறியது:
இப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. காவலர்களுக்கு மட்டுமின்றி சுற்று வட்டாரக் குடியிருப்புப் பகுதிகளுக்கும் இது பேருதவியாக இருக்கும்.
காவலர்கள் அனைவரின் கூட்டு முயற்சிக்குப் பலன் கிடைத்துள்ளது. மைதானத்தில் பெய்த ஒரு துளி மழைநீரும் வீணாகாமல் இங்கு தேங்கி நிற்பதால், வெளியிடங்களிலிருந்து தற்போது சில பறவைகள் வரத் தொடங்கியுள்ளன. பட்டுப்போன சில மரங்களும் துளிர்க்கத் தொடங்கியுள்ளன.
இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதனால் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை முறையாகப் பராமரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.