தருமபுரி

தருமபுரி:  பாமக கோட்டையைத் தகர்த்த திமுக

தருமபுரி மக்களவைத் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் அறிமுக வேட்பாளரிடம் அன்புமணி தோல்வியடைந்தார்.  இந்த வெற்றியின் மூலம்,  பாமகவின் கோட்டையை திமுக கைப்பற்றியுள்ளது. 

ஆா்.ராதாகிருஷ்ணணன்


தருமபுரி மக்களவைத் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் அறிமுக வேட்பாளரிடம் அன்புமணி தோல்வியடைந்தார்.  இந்த வெற்றியின் மூலம்,  பாமகவின் கோட்டையை திமுக கைப்பற்றியுள்ளது. 
தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டார்.  இவரை எதிர்த்து திமுக வேட்பாளராக தருமபுரியைச் சேர்ந்த டிஎன்வி எஸ்.செந்தில்குமார் களமிறங்கினார். 
தேர்தல் அரசியலுக்கு முதல்முறையாக அறிமுகமாகும் வேட்பாளர் செந்தில்குமார் போட்டியிடுவதால்,  வெற்றி நமதே என்கிற எண்ணத்தில் பாமகவினர் களமிறங்கினர்.  இந்த நிலையில்,  தருமபுரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியாயின. இதில்,  அன்புமணியை திமுக வேட்பாளர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார் வீழ்த்தி, வெற்றி வாகை சூடினார்.
பாமக கோட்டை: தருமபுரி மக்களவைத் தொகுதியில் கடந்த 1998-இல் பாமக சார்பில் கே.பாரிமோகன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  இதேபோல,  கடந்த 1999-இல் பாமகவைச் சேர்ந்த பு.தா.இளங்கோவன் வெற்றி பெற்றார்.  2004-இல் பாமகவைச் சேர்ந்த இரா.செந்தில் வெற்றிபெற்றார்.
இதைத் தொடர்ந்து,  கடந்த 2014-இல் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  கடந்த 1998 தொடங்கி கடந்த 2009-ஆம் ஆண்டு தேர்தலைத் தவிர்த்து,  ஏனைய நான்கு தேர்தல்களிலும் பாமகவே தருமபுரியில் வெற்றிபெற்று வந்தது. 
தருமபுரி மக்களவைத் தொகுதியில் மொத்த வாக்காளர்களில் வன்னியர் சமுதாயத்தின் வாக்குகளே வெற்றியை தீர்மானப்பதாக இருந்ததால்,  இத் தொகுதியை, அதிமுக, திமுக என எந்தக் கூட்டணியில் இருந்தாலும்,  தொடர்ந்து தேர்வு செய்து பாமக போட்டியிட்டது.  இதனால், அக் கட்சியினர் தருமபுரி தொகுதியை தங்களது கோட்டை எனக் கொண்டாடி வந்தனர்.
கோட்டையைத் தகர்த்த திமுக: தருமபுரியில் பாமக வேட்பாளர்கள் தொடர்ந்து வெற்றி பெற்றுவந்த நிலையில்,  தற்போதைய மக்களவைத் தேர்தலில் (2019) மீண்டும் அக் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இரண்டாவது முறையாகப் போட்டியிட்டார்.  இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார் 70,753 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.  இதன் மூலம், பாமகவின் கோட்டையாக கருதப்பட்ட தருமபுரி மக்களவைத் தொகுதி திமுக வசமானது. 
அறிமுக வேட்பாளரிடம் தோல்வி:   தொடர்ந்து இரண்டாவது முறையாக களமிறங்கிய அன்புமணி, அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினருடன் கரம் கோத்து போட்டியிட்டார்.  இந்த நிலையில்,  இவரை எதிர்த்து திமுக செந்தில்குமாரை வேட்பாளராக அறிவித்தது.  தேர்தல் அரசியலுக்கு முதல்முறையாக அறிமுகமான செந்தில்குமாரை,  கூட்டணி பலத்துடன் வீழ்த்த முடியும்.  தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அன்புமணி ராமதாஸ், பாஜக தலைமையிலான ஆட்சியில் மத்திய அமைச்சராவார் என பாமக சார்பில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
   ஆனால், எதிர்பாராத விதமாக அறிமுக வேட்பாளரான செந்தில்குமாரிடம் அன்புமணி தோல்வியடைந்தார்.  தருமபுரி மக்களவைத் தொகுதியில் கடந்த 2014-இல் போட்டியிட்ட அன்புமணி,  தான் பொது வேட்பாளர் என பிரசாரம் செய்தார். மேலும், தான் வெற்றி பெற்றால், தொகுதியிலே வீடு எடுத்து தங்குவேன்.  தருமபுரி தொகுதியிலிருந்து வேலை தேடி வெளியூருக்குச் சென்ற இளைஞர்களுக்கு சொந்த மண்ணிலே வேலைவாய்ப்பு உருவாக்குவேன்.  நீர்ப் பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவேன் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். 
      அதைத் தொடர்ந்து, வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரான அன்புமணி,  தொகுதி வளர்ச்சித் திட்ட நிதி மூலம், பேருந்து நிறுத்தங்கள் அமைப்பது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் அமைப்பது, சமுதாயக் கூடங்கள் கட்டியது உள்ளிட்ட பணிகளைத் தவிர,  குறிப்பிடும்படியாக எவ்வித வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்களிடம் நிலவியது. 
தருமபுரி-மொரப்பூர் ரயில் பாதை திட்டத்துக்கு தேர்தல் அறிவிப்புக்கு வெகு சில நாள்கள் முன்பு அடிக்கல் நாட்டு விழா மட்டும் நடத்தப்பட்டது.  2014-இல் நீண்ட நாள்கள் நடத்தபட்ட நன்றி அறிவிப்புக் கூட்டங்கள்,  தலித் கிராமங்களில் நடத்தப்படாதது உள்ளிட்ட காரணங்களுடன், தேர்தலுக்கு வெகு சில நாள்கள் முன்புவரை அதிமுக தலைவர்களையும்,  முக்கியமாக தருமபுரி அதிமுக மாவட்டச் செயலரும், மாநில உயர்கல்வித் துறை அமைச்சருமான கே.பி.அன்பழகனை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு, மாறாக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தது போன்ற நடவடிக்கைகள் நம்பகத்தன்மையை மக்களிடம் ஏற்படுத்தவில்லை.  இதன் காரணமாக அன்புமணி வெற்றி பெற முடியவில்லை என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
தருமபுரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட அரூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில், அன்புமணி பெற்ற வாக்குகள் 65072-ஐ காட்டிலும் 39,870 வாக்குகள் கூடுதலாக, மொத்தம் 104942 வாக்குகள் திமுக வேட்பாளர் பெற்றுள்ளார்.  இதேபோல , அமைச்சர் கே.பி.அன்பழகன் தொகுதியான பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் பாமக பெற்ற வாக்குகளான 75,523-ஐ காட்டிலும் 22404 வாக்குகள் திமுக கூடுதலாக பெற்று மொத்தம் அந்தத் தொகுதியில் மட்டும் 97,927 வாக்குகள் பெற்றது. 
பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணியின் சொந்தத் தொகுதியான மேட்டூரில் சட்டப்பேரவைத் தொகுதியில் பாமக பெற்ற வாக்குகள் 82864. இத் தொகுதியில் பாமகவைவிட 15460 வாக்குகள் திமுக கூடுதலாகப் பெற்று மொத்தம் 98327 வாக்குகள் பெற்றது குறிப்பிடக்கது.  தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் ஆகிய மூன்று பேரவைத் தொகுதிகள் மட்டும் பாமகவுக்கு கை கொடுத்தது.
பதிவான வாக்குகள்(2019): அன்புமணி ராமதாஸ் (பாமக)-504235, டிஎன்வி எஸ்.செந்தில்குமார் (திமுக) 574988. 2014 மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள்: அன்புமணி ராமதாஸ் (பாமக)-468194, ஆர்.தாமரைச் செல்வன் (திமுக)-180297. மோகன் (அதிமுக)-391048.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

மிஸ் பண்ணிடாதீங்க... ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

SCROLL FOR NEXT