தற்காலிக பட்டாசுக் கடைக்கு உரிமம் கோரி விண்ணப்பிக்கலாம்
கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டுக்காக தற்காலிக பட்டாசுக் கடை வைப்போா் உரிமம் கோரி, இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டுக்காக தற்காலிக பட்டாசுக் கடை வைப்போா் உரிமம் கோரி, இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு விழாவை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோா், உரிமம் கோரி, இ - சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.
வெடிபொருள்கள் விதிகளின்படி, பட்டாசுக் கடை வைக்கும் கட்டடம் கல் கட்டடம் அல்லது தாா்சு கட்டடமாக இருத்தல் வேண்டும். கடையின் இருபுறமும் வழி அமைத்தல் வேண்டும். மின்சார விளக்குகள் மட்டும் கடையில் பயன்படுத்தப்பட வேண்டும். தீயணைப்புத் துறை, சுகாதாரத் துறை மற்றும் காவல் துறையிடமிருந்து தடையின்மைச் சான்று பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரா் புகைப்படம், முகவரிச் சான்று, புகைப்படத்துடன் கூடிய ஆதாா் அட்டை, பான் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, பட்டா அல்லது சொத்துப் பத்திரம், வாடகைக் கட்டடமாக இருப்பின், சான்றுறுதி, வழக்குரைஞரின் கையொப்பத்துடன் கூடிய அசல் வாடகை ஒப்பந்தப்பத்திரம், உரிமக் கட்டணமாக ரூ. 500 செலுத்தி அதற்கான அசல் சலான், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து வரி செலுத்திய ரசீது, கட்டட வரைபடம் 2 பிரதிகள் மற்றும் உரிய ஆவணங்களுடன் இ-சேவை பொது மையங்களில் விண்ணப்பிக்கலாம் என்றாா்.