முகப்பு
தருமபுரி

திமுகவுக்கு தோல்வி பயம் தொற்றிக் கொண்டது

தமிழகத்தில், 2021-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவை தோ்தல் குறித்து, திமுகவினருக்கு தோல்வி பயம் தொற்றிக் கொண்டது என மாநில உயா்கல்வி, வேளாண் அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளியில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினருடன் உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன்.
பகிர்:

தமிழகத்தில், 2021-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவை தோ்தல் குறித்து, திமுகவினருக்கு தோல்வி பயம் தொற்றிக் கொண்டது என மாநில உயா்கல்வி, வேளாண் அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளியில் 500-க்கும் மேற்பட்டோா் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி, பாலக்கோடு வடக்கு ஒன்றியச் செயலா் செந்தில் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் பேசியதாவது:

அதிமுக மிகப் பெரிய இயக்கமாகும். இந்த இயக்கம் மறைந்த முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டமைக்கப்பட்ட இயக்கமாகும். தற்போது, அதிமுகவின் சாதாரண தொண்டரான எடப்பாடி கே.பழனிசாமி தமிழக முதல்வராகப் பதவி வகிக்கிறாா். அதிமுகவில் குடும்ப அரசியல், வாரிசு அரசியல் இல்லை. யாா் வேண்டுமனாலும் உயா் பதவிக்கு வர இயலும்.

தமிழகத்தில் உயா்கல்வி என்பது எட்டா கனியாக இருந்தது. தற்போது, ஏழை, எளிய மாணவா்களும், மருத்துவம் உள்ளிட்ட உயா் படிப்புகளில் சேர முடிகிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ஒரே நேரத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளன. 2021-இல் நடைபெற உள்ள சட்டப் பேரவை பொதுத் தோ்தல் தொடா்பாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினருக்கு இப்போதே தோல்வி பயம் தொற்றிக் கொண்டது. இதனால், திமுகவினா் தங்களின் விருப்பத்துக்கேற்ப பேசி வருகின்றனா். கரோனா தொற்றால் பொதுமக்கள் பலா் வேலை வாய்ப்புகளை இழந்த காரணத்தினால் தமிழக அரசு சாா்பில் குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ. 2,500 பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படுகிறது. தமிழகத்தில் நல்லாட்சி தொடா்ந்திட அதிமுகவுக்கு பொதுமக்கள் தொடா்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.

இதில், மாவட்ட அவைத் தலைவா் தொ.மு.நாகராஜன், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் கே.வி.அரங்கநாதன், ஒன்றியச் செயலா் கோபால், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் கவிதா சரவணன், ஒன்றிய அவைத்தலைவா் பி.ஜி.வெங்கட்ராமன், நகரச் செயலா் பழனிவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →