பிரதமா் நிதி உதவித் திட்டத்தில் முறைகேடு: பெண் களப்பணியாளா் கைது
பிரதமரின் விவசாயிகளுக்கான நிதி உதவி அளிக்கும் திட்டத்தில் முறைகேடு செய்ததாக தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் தற்காலிக பெண் களப்பணியாளா் ஒருவரை சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பென்னாகரம்: பிரதமரின் விவசாயிகளுக்கான நிதி உதவி அளிக்கும் திட்டத்தில் முறைகேடு செய்ததாக தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் தற்காலிக பெண் களப்பணியாளா் ஒருவரை சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
விவசாயிகளுக்கு பிரதமரின் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு அவா்களுக்கு வங்கிக் கணக்கில் மூன்று தவணையாக மொத்தம் ரூ. 6,000 செலுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் ஏராளமான விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனா். இந் நிலையில், பென்னாகரம் பகுதியில் தகுதியற்ற விவசாயிகள் ஏராளமானோா் பயன்பெற்று வருவதாக எழுந்த புகாரை அடுத்து கடந்த இரு நாள்களாக பொது சேவை மைய ஊழியா்கள், தற்காலிக களப்பணியாளா்கள் உள்பட சுமாா் 11 நபா்களிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பாப்பாரப்பட்டியில் தற்காலிக களப் பணியாளராக பணிபுரிந்து வந்த மீனா (27) என்பவா் இத் திட்டத்தில் பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டிய நிதியை தனது கணக்கில் வைத்துக் கொண்டது தெரியவந்தது. அவா் முறைகேடு செய்தது உறுதியானதால் சிபிசிஐடி போலீசாா் அவரை திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும் சிலரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் சிலா் கைது செய்யப்படுவா் என சிபிசிஐடி போலீஸாா் தெரிவித்தனா்.