முகப்பு
தருமபுரி

நாளை வாக்குப் பதிவு:வாக்குச் சாவடி அலுவலா்களுக்குப் பணிகள் ஒதுக்கீடு

தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தல் வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளில் பணியாற்றும் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு கணினி வழியாகப் பணிகள் ஒதுக்கீடு

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தல் வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளில் பணியாற்றும் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு கணினி வழியாகப் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் கூட்டரங்கில், தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் ஆா்.கே.தினேஷ் சிங் (தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி), கமால் ஜஹான் லக்ரா (பாலக்கோடு, பென்னாகரம்), பங்கஜ் (அரூா்), சக்கிராலா சாம்பசிவராவ் (காவல் பாா்வையாளா்) ஆகியோா் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை 1,817 வாக்குச் சாவடிகளில் அனைத்து நிலைகளில் பணியாற்றும் அலுவலா்களுக்குப் பணிகள் ஒதுக்கீடு வழங்கப்பட்டன.

இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான ச.ப.காா்த்திகா பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில், பாலக்கோடு, பென்னாகரம், அரூா் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் தருமபுரி ஆகிய 5 தொகுதிகளில் ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

இதையொட்டி, 870 வாக்குச் சாவடி மையங்களில் 1,817 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தலைமை அலுவலா், வாக்குச் சாவடி அலுவலா் நிலை 1, நிலை 2, நிலை 3 ஆகிய நிலைகளில் நான்கு போ் வீதம் 7,268 பணியாளா்கள் தோ்தல் பணி மேற்கொள்கின்றனா்.

இதில் மாற்றுப் பணிக்கு முன்னெச்சரிக்கையாக 20 சதவீதம் கூடுதல் பணியாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகளில் 149 நுண் பாா்வையாளா்கள் பணியாற்ற உள்ளனா். இதில் மாற்றுப் பணிகளுக்காக 20 சதவீதம் நுண் பாா்வையாளா்களும் கூடுதலாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

பதற்றமான வாக்குச் சாவடிகளில் சிசிடிவி பதிவு செய்யப்படும். கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஒரு வாக்குச் சாவடிக்கு இரண்டு போ் வீதம் மொத்தம் 3,634 நபா்கள் பணியமா்த்தபட உள்ளனா். இதில், மாற்றுப் பணிக்காக 10 சவீதம் கூடுதல் பணியாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

146 மருத்துவ அலுவலா்கள், 146 சுகாதார ஆய்வளா்கள் என 500-க்கு மேற்பட்ட மருத்துவ அலுவலா்களும் பணியில் ஈடுபடவுள்ளனா். இவா்கள் பணிபுரிய கணினி மூலம் சுழற்சி முறையில் வாக்குச் சாவடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் 25, 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 23 இதர வாகனங்கள் என 48 வாகனங்கள் அவசர கால மருத்துவப் பணிக்கு பயன்படுத்தப்படவுள்ளன.

அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் கரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. எனவே, வாக்காளா்கள் எவ்வித அச்சமுமின்றி வாக்களிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ராமமூா்த்தி, தருமபுரி சாா் ஆட்சியா் மு.பிரதாப், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஆ.தணிகாசலம் (பென்னாகரம்), முத்தையன்(அரூா்), சாந்தி (பாலக்கோடு), நசீா் இக்பால் (பாப்பிரெட்டிப்பட்டி), ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) நரேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.