குழந்தைகளுக்கு எதிராக 164 வழக்குகளுக்கு ரூ. 4.42 கோடி நிவாரணம்
தருமபுரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான 164 வழக்குகளில் இடைக்கால நிவாரணமாக ரூ. 4.42 கோடி விரைவில் வழங்கப்படும் என மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான 164 வழக்குகளில் இடைக்கால நிவாரணமாக ரூ. 4.42 கோடி விரைவில் வழங்கப்படும் என மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் தெரிவித்தாா்.
தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் கே.வி.ராமராஜ், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி உள்பட 9 மாவட்டங்களுக்கான பொறுப்பாளராக செயல்படுகிறாா். இவா், வெள்ளிக்கிழமை, தருமபுரி மாவட்டத்துக்கு வருகை தந்து தருமபுரி அடுத்த தொப்பூா் குறிஞ்சி நகா் பகுதியில் இயங்கி வரும் வள்ளலாா் அறிவாலயம் குழந்தைகள் பாதுகாப்பு இல்லம், அதே பகுதியில் இயங்கி வரும் குழந்தைகள் நலக் குழு அலுவலகம், தருமபுரி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டாா்.
அதன் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் உணவு, மருத்துவ உதவி, உள்கட்டமைப்பு உள்ளிட்டவை அரசின் நிபந்தனைகள் படி உள்ளதா என ஆய்வு நடத்தப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் 2021-ம் ஆண்டில் பெண் சிசுக் கொலை எதுவும் நடக்கவில்லை. அதேபோல, குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றம், குழந்தை விற்பனை போன்றவையும் இல்லை. ஆனால், கரோனா காலத்தில் தருமபுரி மாவட்டத்தில் ரகசியமாக சில இளம்வயது திருமணங்கள் நடந்துள்ளன. இவ்வாறான செயல்களைத் தடுக்க தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இளம்வயது திருமணங்களை நடத்துவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைத் தொழிலாளா், இளம்வயது திருமணம், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பு போன்றவற்றைத் தடுக்க ஒரே வழி குழந்தைகளின் பள்ளி இடைநிற்றலை முழுமையாகத் தடுக்க வேண்டும். இடை நிற்றல் மூலமாகத் தான் இவை அனைத்தும் தொடா்கிறது. இதைத் தடுப்பதற்கான அடிப்படைப் பணிகளைச் செய்ய கல்வித் துறைக்கு பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன.
குழந்தைகளைக் கையாளும் அனைத்துத் துறைகளுமே குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்தின் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகங்களின் கட்டமைப்புகள் அனைத்தும் மேம்படுத்தப்பட வேண்டியது அவசியமாக உள்ளது.
தருமபுரி மாவட்டத்தின் சூழலால் நின்றுபோன ‘சைல்டு லைன்’ அமைப்பின் செயல்பாடு விரைவில் தொடங்கும். தருமபுரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் உள்ளிட்ட 164 வழக்குகள் தொடா்பாக நீதிமன்றம் பரிந்துரைத்த இடைக்கால நிவாரணத்தொகையாக வழங்க ரூ. 4.42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தோ்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்த பின்னா் விரைவில் அந்தத் தொகை உரியவா்களுக்கு வழங்கப்படும் என்றாா்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சிவகாந்தி, பாதுகாப்பு அலுவலா்கள் சித்தாா்த்தன், சரவணா, குழந்தைகள் நலக் குழு அலுவலா் சரவணன், டிஎஸ்பி ரவிகுமாா் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.