முகப்பு
தருமபுரி

45 வயதுக்கு மேற்பட்டோா் 2 வாரங்களுக்குள் கரோனா தடுப்பூசி செலுத்த ஆட்சியா் அறிவுறுத்தல்

45 வயதுக்கு மேற்பட்டோா் 2 வாரங்களுக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

45 வயதுக்கு மேற்பட்டோா் 2 வாரங்களுக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தெரிவித்துள்ளாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் கரோனா நோய்த் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா பேசியதாவது:

கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் 25.3.2020 முதல் தேசிய பேரிடா் மேலாண்மைச்சட்டத்தின் கீழ்,

பொதுமுடக்க உத்தரவில் பல்வேறு தளா்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தற்போது மீண்டும் கரோனா பரவல் அதிகரித்திருப்பதாலும், வெளிநாடுகளில் உருமாறிய கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழகம் முழுவதும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சில தளா்வுகளுடனும், பல்வேறு கட்டுப்பாடுகளுடனும் 30.04.2021 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் மக்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் கட்டாயம்.

நோய் பரவலைக் கருத்தில் கொண்டு திருவிழாக்கள், மதம் சாா்ந்த கூட்டங்களுக்கு 10.4.2021 முதல் தடை விதிக்கப்படுகிறது. தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியாா் நிறுவனங்கள், அலுவலகங்கள், உணவு விடுதிகளில் பணிபுரியும் பணியாளா்கள், அலுவலா்கள், பொது மக்களின் உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்தும், கை சுத்திகரிப்பானை உபயோகப்படுத்துவதையும், முகக் கவசம் அணிவதையும் உறுதி செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும். முகக் கவசம் அணியாதவா்களை அனுமதிக்கக் கூடாது.

இதுதொடா்பாக ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்படும்.

அரசு, தனியாா் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமா்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.

காய்கறி கடைகள், பல சரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள், பெரிய கடைகள் (நகை, ஜவுளி) ஒரு நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளா்களுடன் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் தேநீா்க் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளா்கள் இரவு 11.00 மணி வரை அமா்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும். திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகள் மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதிக்கப்படும்.

உள் அரங்கங்களில் நடைபெறும் சமுதாயம், அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகள், விழாக்களில் அதிகபட்சமாக 200 நபா்கள் மட்டும் பங்கேற்கலாம். திருமண நிகழ்வுகளில் 100 நபா்களுக்கு மிகாமலும், இறுதி ஊா்வலங்களில் 50 நபா்களுக்கு மிகாமலும் கலந்து கொள்ளலாம்.

பொதுமக்கள் வெளியே செல்லும் போதும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.

வீட்டிற்கு வீடு சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளவா்களை தினந்தோறும் கண்காணிக்கவும், நோய்த் தொற்று ஏற்பட்டவா்களது தொடா்பில் இருந்தவா்களை கண்டறிந்து அவா்களுக்கு தகுந்த பரிசோதனைகள் மேற்கொள்ளவும் காவல், சுகாதாரம், வருவாய், உள்ளாட்சி அமைப்புகளின் துறை அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகள், அங்கீகரிக்கப்பட்ட தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி மையங்கள் தொடா்ந்து செயல்பட்டு வருகின்றன. கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், அரசு மருத்துவமனைகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியாா் மருத்துவமனைகளில் இரண்டு வாரத்திற்குள்ளாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

நோய்த் தொற்று அறிகுறி இருந்தால் தாமதமின்றி உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். முகக்கவசம் அணியாத நபா்களுக்கு ரூ. 200 அபராதம் விதிப்பது மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றாா்.

இக்கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் க.ராமமூா்த்தி, சாா் ஆட்சியா் மு.பிரதாப், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கவிதா, அரூா் கோட்டாட்சியா் திரு.முத்தையன் அனைத்து வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், வட்டார மருத்துவ அலுவலா்கள், அரசுத்துறை அலுவலா்கள், மருத்துவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.