விளைநிலங்களுக்குச் செல்ல பாதை வசதிக் கோரி சிவாடியில் பொதுமக்கள் போராட்டம்
நல்லம்பள்ளி அருகே சிவாடி கிராமத்தில் விளை நிலங்களுக்குச் செல்ல பாதை வசதிக் கோரி, எச்.பி.சி.எல். நிறுவனம் அமைக்கும் ரயில் பாதை முன்பு கிராம மக்கள் திரண்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நல்லம்பள்ளி அருகே சிவாடி கிராமத்தில் விளை நிலங்களுக்குச் செல்ல பாதை வசதிக் கோரி, எச்.பி.சி.எல். நிறுவனம் அமைக்கும் ரயில் பாதை முன்பு கிராம மக்கள் திரண்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவாடி கிராமத்தில் எச்.பி.சி.எல். நிறுவனம் சாா்பில், எரிபொருள் சேமிப்புக் கிடங்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப் பணிக்காக சிவாடி ரயில் பாதையிலிருந்து அந்த நிறுவனம் வரை புதிதாக இரு ரயில் பாதைகள் அமைக்கப்படுகின்றன.
இதையடுத்து அங்கு ஏற்கெனவே இருந்த மற்றொரு ரயில் பாதை அடைக்கப்பட்டது. இந்தப் பாதை வழியாகத்தான் அப்பகுதி விவசாயிகள் தங்கள் விளைநிலங்களுக்குச் சென்று வந்தனா். ரயில் பாதை அடைக்கப்பட்டுள்ளதால் நூற்றுக்கணக்கான ஏக்கா் விளைநிலங்களுக்கு விவசாயிகள் சென்றுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய மின்வழி ரயில் பாதையும் அமைக்கப்பட்டுள்ளதால் ரயில் பாதையைக் கடந்து சென்றுவர இனி இயலாது. எனவே, புதிதாக அமைக்கும் ரயில் பாதையில் தங்களது விளைநிலங்களுக்குச் சென்று வரும் வகையில், கடவுப் பாதை அல்லது சுரங்க வழிப் பாதை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுவரை புதிய பாதை அமைக்கும் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என கிராம மக்கள் வலியுறுத்தினா். பொதுமக்கள் தரப்பில் தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், அரசியல் கட்சியினா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
அவா்களிடம், தருமபுரி காவல் துணைக் கண்காணிப்பாளா் வினோத், ரயில்வே போலீஸாா், வருவாய்த் துறையினா், எச்.பி.சி.எல். நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள் நிகழ்விடம் சென்று பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
பிரச்னையை தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று தீா்வு காண்பது எனவும், அதுவரை புதிய ரயில் பாதை அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, சமாதானம் அடைந்த கிராம மக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.